Aran Sei

2000 ரூபாய் கள்ள நோட்டுகள்: ‘ மகா யாகத்தின் ‘ தோல்வியா?

Image Credits: Scroll In

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட அனைத்து கள்ள நோட்டுகளிலும் மிக அதிகமானவை 2000 ரூபாய் நோட்டுகள்தான் என்று தேசிய குற்ற பதிவு அலுவலகத்தின் (என்சிஆர்பி) ஆண்டு குற்றவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். அப்போது, கள்ளப் பண மோசடிகள், கறுப்புப் பணம் மற்றும் ஊழல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக இது செய்யப்படுவதாக மோடி தனது தொலைக்காட்சி உரையில் கூறினார்.

அதில், “ஊழல், கறுப்புப் பணம் மற்றும் போலி நோட்டுகளின் தீமைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த மகா யாகத்தில் ஒவ்வொரு குடிமகனும் (பெரும் தியாகத்தில்) சேரக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று அவர் கூறியிருந்தார்.

ஒரே இரவில் 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில், அரசாங்கம் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த ரூபாய் நோட்டுகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன, அவற்றை கள்ளத்தனமாக நகலெடுப்பது கடினம், எனவே போலி நோட்டுகளின் அச்சுறுத்தலை குறைக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், என்சிஆர்பியின் சமீபத்திய அறிக்கை, பிடிபட்ட மொத்த போலி நோட்டுகளில் 56% 2000 ரூபாய் நோட்டுகள்தான் (2017 மற்றும் 2018 கணக்கெடுப்பின்படி) என்று தெரிவித்துள்ளது.

பழைய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அகற்றுவதாக அரசு அறிவித்தபோது, ​​புழக்கத்தில் இருந்த கள்ள நோட்டுகளை அழிப்பது அதற்கான ஒரு காரணம் என்று கூறியது.

என்சிஆர்பி அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டு ரூ.25.39 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது 2018-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.17.95 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும்போது 11.7% அதிகம்.

2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 90,566 (ரூ. 18.11 கோடி) 2019-ல் பறிமுதல் செய்யப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான பறிமுதல்கள் கர்நாடகா 23,599 நோட்டுகள் (ரூ. 4.72 கோடி), குஜராத் 14,494 நோட்டுகள் (ரூ.2.9 கோடி) மற்றும் மேற்கு வங்கத்தில் 13,637 நோட்டுகள் (ரூ.2.72 கோடி) பறிமுதல்கள் நடைபெற்றுள்ளன.

ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்ட 2019-20-க்கான இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆண்டு அறிக்கை, ரிசர்வ் வங்கி அச்சகங்கள் கடந்த நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை என்று கூறியுள்ளது.  புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை படிப்படியாகச் சரிந்தது. 2017-18-ல் 360 கோடி நோட்டுகளிலிருந்து 2019-20ல் 273 கோடி நோட்டுகளாகச் சரிந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்