Aran Sei

‘மீண்டும் தனியார்மயமாக்கல்’ – நிதி ஆயோக் ஆலோசனை

Image Credits: The Financial Express

பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை மற்றும் முதலீடுகளை குறைப்பதன் மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ‘எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா உட்பட 48 நிறுவனங்களை, தனியார்மயப்படுத்த ஏற்கனவே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் சில பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கப்பட வேண்டிய நிறுவனங்களின் விவரங்கள் பரிந்துரைக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்குப் பரிசீலிக்கக்கூடிய நிறுவனங்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு ஆயோக் வெவ்வேறு அமைச்சகங்களைக் கேட்டுள்ளது. அதில் விற்கப்படும் நிறுவனங்களின் உரிமை மற்றும் கட்டுப்பாடு இரண்டும் அதனை வாங்கும் தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்படும்.

“அடுத்த சுற்றில் எந்தெந்த முக்கியத்துவம் இல்லாத பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பங்குகளை விற்கலாம் என்பதை ஆலோசனை செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்,” என்று ஒரு அரசு அதிகாரி ‘எக்கனாமிக் டைம்ஸ்’ இடம் கூறியுள்ளார்.

திட்டமிட்ட ஒப்பந்தங்கள், சிறு பங்குகளை விற்கக்கூடிய முதலீடு, ஒரு நிறுவனத்தின் சில பங்குகளை பணமாக்குதல் அல்லது அடையாளம் காணப்படும் நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறுதல் போன்ற பலவற்றை இந்த ஆலோசனை கூட்டம் பரிசீலிக்கும்.

எஃகு ஆலைகள், பெட்ரோலியம், உரங்கள், பாதுகாப்பு, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய மூலோபாய துறைகளில் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளப்படும். தனியார்மயமாக்கல் அல்லது முதலீட்டைக் குறைப்பதன் மூலம் முக்கியத்துவம் அற்ற துறைகளை முற்றிலுமாக வெளியேறும் அரசாங்கத்தின் நோக்கத்துடன் ஒரு போர்க்கள அடிப்படையிலான தனியார்மயமாக்கலுக்கான நடவடிக்கை இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று இச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, பொது துறை நிறுவனங்களின் விற்பனைக்கு எதிராகப் பலரும் தங்களது கருத்தைத் தெரிவித்தனர். ஒரு ட்வீட்டர் பயனாளி, “ஊழியர்களின் சம்பளத்தை வழங்க ரயில்வே துறைக்குப் பணம் இல்லையென்றால், அது ஏன் பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்தது!?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“மோடி நாட்டை கைவிட மாட்டேன் என்று உறுதியளித்தார், ஆனால் நாட்டை விற்க மாட்டேன் என்று உறுதியளிக்கவில்லை,” என்று மற்றொரு ட்வீட்டர் பயனாளி கேலி செய்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்