Aran Sei

லட்சுமி விலாஸ் வங்கி முடக்கம் – வெளிநாட்டு வங்கிக்கு விற்க திட்டம்

லட்சுமி விலாஸ் வங்கி

மிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி ஒன்றிய அரசின் நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன் படி, நேற்று மாலை 6 மணி முதல் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை அந்த வங்கி தனது வழக்கமான செயல்களை தொடர்வதற்கும், புதிய செயல்களை தொடங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் எழுத்துபூர்வமான அனுமதி இல்லாமல் எந்த ஒரு வாடிக்கையாளர் அல்லது கடன் கொடுத்தவருக்கு ரூ 25,000-க்கு அதிகமான தொகையை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் லட்சுமி விலாஸ் வங்கியின் இந்த நிலைமைக்கு ரிசர்வ் வங்கியே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளது.

“வங்கியின் அப்போதைய நிர்வாகம் ரூ 2000 கோடிக்கும் அதிகமான வாராக் கடன்களில் வங்கியை சிக்க வைத்தது. ரெலிகேர், ஜெட் ஏர்வேஸ், காக்ஸ் அண்ட் கிங்ஸ், நீரவ் மோடி குழுமம், காஃபி டே, ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் முதலான நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன்கள் வாராக் கடன்களாக மாறின.” என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

“இந்த விரும்பத்தகாத கடன்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி அறிந்திருந்தது. இருந்தும் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி காலம் தாழ்த்தியதன் காரணமாக இப்போது இவ்வங்கியின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டி வந்திருக்கிறது” என்று அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

“இந்தத் தடை வங்கிகளின் நிலைத்தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பொதுமக்கள் மனதில் ஐயத்தை விதைக்கும். ஏனென்றால் மக்கள் தாம் உழைத்து ஈட்டிய சேமிப்புப் பணத்தை வங்கிகளில் வைத்திருக்கிறார்கள்” என்றும் இந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது.

லட்சுமி விலாஸ் வங்கி இந்தியா முழுவதும் 569 கிளைகளையும் 7 பிராந்திய அலுவலகங்களையும் கொண்டுள்ளது என்றும் அது 1047 ஏடிஎம்களை இயக்குகிறது என்றும் moneycontrol.com தெரிவிக்கிறது. இந்த வங்கி முதன்மையாக தமிழ்நாட்டில் செயல்பட்டாலும் அது 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது. வங்கியின் மொத்த வணிகம் செப்டம்பர் 2020 இறுதியில் ரூ 37,595 கோடியாக இருந்தது. இது சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் ரூ 47,115 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கியின் இந்திய துணை நிறுவனமான டிபிஎஸ் இந்தியாவுடன் இணைப்பதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி நேற்றே வெளியிட்டுள்ளது. அது தொடர்பான பத்திரிகை செய்தியில் (எண் 2020-2021/647) டிபிஎஸ் இந்தியாவுக்கு வங்கித் துறையில் செயல்படுவதற்கான உரிமம் 2018 அக்டோபர் மாதம் வழங்கப்பட்டிருப்பதை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்த வரைவுத் திட்டம் தொடர்பான ஆலோசனைகளையும், எதிர்ப்புகளையும் நவம்பர் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் (அதாவது 3 நாட்களுக்குள்) அனுப்பும்படி ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் யோகேஷ் தயாள் கையொப்பமிட்ட இந்தப் பத்திரிகை செய்தி கேட்டுக் கொண்டிருக்கிறது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கையில், “லட்சுமி விலாஸ் வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்கும்படி சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், அதை ரிசர்வ் வங்கி புறக்கணித்து விட்டது” என்றும், “இப்போது இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக வெளியாகியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

“இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. “மேலும், வங்கியின் உயர் அதிகாரிகள் சிலர் இந்த வாராக் கடன்களுக்கு பொறுப்பானவர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் யெஸ் வங்கி மீது இதே போன்ற தடை விதிக்கப்பட்டு அவ்வங்கியை பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு மீட்டது. 2004-ம் ஆண்டு நெருக்கடியில் சிக்கியிருந்த குளோபல் டிரஸ்ட் வங்கியை பொதுத்துறை வங்கியான ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்சுடன் ரிசர்வ் வங்கி இணைத்தது என்று moneycontrol.com குறிப்பிடுகிறது.

லட்சுமி விலாஸ் வங்கியை மும்பையைச் சேர்ந்த இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்தை சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்