Aran Sei

நூறு நாள் வேலைத்திட்டம்: சாதித்தது என்ன?

credit: thehindu.com

கிராமப்புற மக்களின் நுகர்வு மீது நூறு நாள் வேலைத்திட்டம் சாதகமான தாக்கத்தை செலுத்துகிறது என்று பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (EPW) வெளிவந்துள்ள ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது.

கிராமப்புறங்களில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தையும் வறுமையையும் ஒழிப்பதற்காக 2004-ம் ஆண்டு நூறு நாள் வேலைத்திட்டம் என்று அறிப்படுகிற தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம், 2009-ம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.

முதன்முதலில், நூறு நாள் வேலைத்திட்டம் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 200 பின்தங்கிய மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவைதான் நூறு நாள் வேலைத்திட்டத்தின் முக்கியமான இரு குறிக்கோள்கள் ஆகும். ஆனால், இத்திட்டம் கிராமப்புறங்களில் சொத்துக்களை உருவாக்குதல், சாதி மற்றும் பாலின பாகுபாடுகளை நீக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

நூறு நாள் வேலைத்திட்டம் பற்றிய இந்த ஆய்வு கட்டுரையை, சென்னை பல்கலைக்கழகத்தில் அளவைப் பொருளியல் (Econometrics) துறையின் பேராசிரியர் பி.மகேந்திர வர்மன் மற்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிப்புரியும் மூத்த ஆய்வாளர் நீரஜ் குமார் இணைந்து எழுதியுள்ளனர்.

மனித மேம்பாடு சுற்றாய்வறிக்கை 2004-05 மற்றும் 2011-12 ஆகிய தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு நூறு நாள் வேலைத்திட்டத்தில் கீழ் பணிப்புரியும் கிராமப்புற குடும்பங்களின் நுகர்வின் அளவு மீது ஏற்படுத்திருயிருக்கும் தாக்கத்தை ஆராய்கிறது.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கும் கிராமப்புற குடும்பங்களின் நுகர்வு செலவு மற்றும் எந்தெந்த பொருட்கள் மீது செலவிடுகின்றனர் ஆகிய கேள்விகளை முன்வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பங்கெடுத்த குடும்பங்களின் நுகர்வு மற்றும் பலவிதமானப் பொருட்கள் மீது செலவுகள் செய்வது அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

நூறு நாள் வேலைத்திட்டம் நடைமுறை செய்யப்பட்ட பிறகு, காய்கறிகள், பழங்கள், இறைச்சி, எண்ணெய், முட்டை ஆகிய பொருட்களின் மீது கிராமப்புற மக்கள் செலவிடுவது அதிகரித்துள்ளது. அதேபோல், நீண்ட காலம் உழைக்கக்கூடிய சரக்குகள் (durable goods) மீது செலவிடப்படுவது அதிகரித்துள்ளது என்று மகேந்திர வர்மன் மற்றும் நிரஜ் குமார் ஆய்வு தெரிவிக்கிறது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்