Aran Sei

வட்டி மீது வட்டி தள்ளுபடி: உச்சநீதி மன்றம் புதிய உத்தரவு

credit: dnaindia.com

டன் தள்ளிவைப்பு வாய்ப்பை எடுத்துக்கொண்ட கடனாளிகளின் கடன்கள் மீதான கூட்டு வட்டியை (வட்டி மீது வட்டி) தள்ளுபடி செய்வது தொடர்பாக மத்திய அரசு கூடுதலாக உறுதிமொழி பத்திரங்களைத் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பொதுமுடக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முடக்கியது. இதன் காரணமாக கடன் பெற்றவர்களுக்கு ஏற்படும் துயரங்களைக் குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி மார்ச் 22-ம் தேதி கடன் தள்ளிவைப்பு நடவடிக்கையை அறிவித்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தள்ளிவைப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கடனாளிகளின் கடன் மீது வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டன. இதை எதிர்த்துப் பல வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளை மொத்தமாக செப்டம்பர் 3-ம் தேதி உச்சநீதி மன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் வாராக் கடனாக அறிவிக்கப்படாத கடன்களை அடுத்த ஆறு மாதத்துக்கு வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் இடைக்கால உத்தரவை செப்டம்பர் 3-ம் தேதி பிறப்பித்தது.

நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் சார்பில் வழக்காடிய தலைமை வழக்குறைஞர் துஷார் மேத்தா, வட்டி மீது வட்டியைத் தள்ளுபடி செய்தல் வங்கி துறையைப் பலவீனமாக்கும் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கு செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வட்டி மீது வட்டியைத் தள்ளுபடி செய்வது பற்றிப் பரிசீலிக்க நிதி அமைச்சகம் வல்லுநர் குழுவை அமைத்திருப்பதாக துஷார் மேத்தா உச்சநீதி மன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கில் மத்திய அரசு விரைவில் உறுதிமொழி பத்திரத்தைத் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு செப்டம்பர் 28-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

செப்டம்பர் 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் வட்டி மீது வட்டி தள்ளுபடி பற்றி மத்திய அரசு ஓரிரு நாட்களில் உறுதிமொழி பத்திரத்தைத் தாக்கல் செய்யக்கோரி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு வட்டி மீது வட்டியைத் தள்ளுபடி செய்யும் பட்சத்தில் மத்திய அரசுக்கும் வங்கித் துறைக்கும் பாதிப்புகள் உண்டாகும் என்று ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசரவ் வங்கி சார்பில் வழக்காடிய துஷார் மேத்தா கூறியிருந்தார். இந்நிலையில், வட்டி மீது வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அக்டோபர் 2-ம் தேதி மத்திய அரசு உறுதிமொழி பத்திரத்தைத் தாக்கல் செய்தது.

மீண்டும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ரிசர்வ் வங்கி அமைத்த காம்நாத் குழுவின் பரிந்துரைகளைப் பற்றி மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் மத்திய அரசின் உறுதி மொழி பத்திரத்தில் பல முக்கியமான பிரச்சினைகளைக் குறித்துப் பேசப்படவில்லை என்றும் பார் & பென்ஞ் இணையதளம் தெரிவிக்கிறது.

மத்திய அரசின் சார்பில் வழக்காடிய துஷார் மேத்தா, காம்நாத் குழு அறிக்கையை மறைப்பதற்கு எந்த உள் நோக்கமும் இல்லை என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி சார்பில் வழக்காடிய மூத்த வழக்குறைஞர் வி.கிரி, வட்டி மீது வட்டி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைக் கணக்கில் கொண்டு, மேலும் சில பரிந்துரைகளை முன்வைக்க இருப்பதாக வாதாடினார் என்று லைவ் லா இணையத்தளம் தெரிவித்துள்ளது.

உச்சநீதி மன்றம் வாராக் கடன் பற்றி வங்கிகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால் வங்கிகளின் கணக்குகள் உறைநிலையில் இருக்கிறது. மத்திய அரசு வட்டி மீது வட்டி தள்ளுபடி குறித்து வங்கிகளின் கருத்தைத் தெரிவிக்க 2 நாட்கள் அவசாகம் வேண்டும் என்று வங்கிகள் சார்பாக வழக்காடிய மூத்த வழக்குறைஞர் ஹரிஷ் சால்வே உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசு தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் ரியல் ஸ்டேட் துறைக்கு நிவாரணம் வழங்கப்படுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்குறைஞர் ஆர்யாமா சுந்தரம் வாதாடியதாக பார் & பென்ஞ் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

மத்திய அரசு, ரிசரவ் வங்கி, வங்கிகள் தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, மத்திய அரசு கூடுதலாக உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அஷோக் மேத்தா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கையும் அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்