Aran Sei

கடன் தள்ளிவைப்பு: காப்பாற்றப்படுவார்களா வாடிக்கையாளர்கள்?

credit: commons.wikimedia.org

கொரோனா காலத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தள்ளிவைப்பு சலுகையை பெற்றவர்களின் கடன்கள் வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அக்டோபர் 5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொது முடக்க நடவடிக்கையை மார்ச் 25-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. கடன் பெற்றவர்கள் மீது பொது முடக்கம் ஏற்படுத்திருக்கும் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கு கடன் தள்ளிவைப்பு வாய்ப்பு கடனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முதலில், மே 31-ம் தேதி வரை வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு பின்னர் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

கடன் தள்ளிவைப்பை எடுத்துக்கொண்ட கடனாளின் கடன்கள் மீது வட்டி மீது வட்டி விதிக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி விசாரனைக்கு வந்தது. வங்கிகள் அடுத்த இரு மாதங்களுக்கு கடன்களை வாராக் கடனாக அறிவிக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்திரவு பிறப்பித்ததுடன் வழக்கையும் செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. எத்தனை விழுக்காடு வட்டி மீது வட்டியாக விதிக்கப்படும் என்பதையும் அதனால் ஏற்கெனவே, கடன் பெறவர்கள் மீதான தாக்கத்தையும் பற்றிய விரிவான திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும், அதை செப்டம்பர் 28-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது.

உச்சநீதி மன்றத்தின் உத்திரவின்படி, முன்னாள் தலைமை தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி தலைமை வல்லுநர் குழுவை மத்திய அரசு அமைத்தது.

கடன் தள்ளிவைப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வட்டி மீது வட்டி தொடர்பான திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பிப்பதற்கு இன்றுதான் கடைசி நாள். அரசு சார்பில் வழக்காடிய தலைமை வழக்குறைஞர் துஷார் மேத்தா, இது சற்றே சிக்கலான பிரச்சினை என்றும் பல பொருளாதார சிக்கல்கள் வந்த வண்ணமுள்ளது என்றும் தெரிவித்தார் என்று லைவ் லா இணையத்தளம் தெரிவிக்கிறது.

கடன் தள்ளிவைப்பு பிரச்சினை குறித்து மத்திய அரசு தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது. வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டிருப்பது தள்ளுபடி செய்யப்படுமா அல்லது செய்யப்படாதா என்பதை 2-3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் தலைமை வழக்குறைஞர் பதிலளித்திருப்பதாக நீதிபதி அஷோக் பூஷன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1-ம் தேதி அரசு சார்ப்பில் மனுத் தாக்கல் செய்யப்படும் என்று துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

கடன் தள்ளிவைப்பை எடுத்துக்கொண்டவர்களின் கடன்களின் வட்டி மீதான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்யும் பட்சத்தில் மத்திய அரசுக்கு 15,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று மேக்குயர் (Macquarie) நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

இந்த வழக்கு அக்டோபர் 5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்