Aran Sei

`சாதிப் பிளவை வலுப்படுத்தும் தாராளமயமாக்கல்’ – ஹார்வர்டு பேராசிரியை

credit : scroll.in

கடந்த மாதம் பிரேசில் நாட்டைப் பின்னுக்குத் தள்ளிக் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது இந்தியா. இவ்வளவு மோசமான சூழலின் போதும் இந்தியா முழுவதும் 1,60,000 மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதியுள்ளனர்.

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் முதல் பத்தில் ஏழு நிறுவனங்கள் ஐஐடி கல்லூரிகள், முதல் பத்துப் பொறியியல் கல்லூரிகளில் ஒன்பது ஐஐடி கல்லூரிகள் என்று அரசு வெளியிட்ட பல்கலைக்கழகத் தரவரிசை கூறுகிறது.

37% மாணவர்கள் பொறியியலைத் தேர்ந்தெடுக்கின்றனர். “ஜேஇஇ போன்ற பெரிய தேர்வுகளின் மூலம் வெளிவரும் தரவரிசையால் நிர்ணயிக்கப்படும் ஒவ்வொரு மாணவரின் தகுதி, சமூகக் கட்டமைப்பின் காரணிகளில் இருந்து விலகியிருக்கிறது” என்று ஹார்வர்டு  பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் அஜந்தா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

“உள்ளார்ந்த திறமையை வைத்து உருவாக்கப்படும் இந்தக் கருத்தாக்கம் ஒவ்வொரு மாணவரையும் தனிமைப்படுத்துதோடு மட்டுமல்லாமல், அதை இயற்கையானதாகவும் மாற்றுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2019 – ம் ஆண்டு “தகுதியின் பாத்திரம் : இந்தியாவில் பொறியியல் கல்வி” என்ற புத்தகத்தில் “இந்தியாவில் கல்வித் தகுதியையும் ஜனநாயகத்தையும் புரிந்துகொள்ள மதிப்பெண் தகுதி சாதிக்குரியதாகவும் மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கு மதிப்பெண் தகுதியின் செயல்பாடுகளையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என்பதை விளக்கியுள்ளார்.

தாராளமயமாக்கல் நடைமுறைக்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் “சாதியின் வீரியத்தைக் கட்டுபடுத்தாத காரணத்தால், தாராளமயமாக்கல் சாதிப் பிளவுகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை ஆதிக்கச் சாதிகளுக்காக இயற்றியது. முழுவதும் பொருளாதார அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் “ஆதிக்கச் சாதியினரைச் சாதியற்றவராக வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“சாதியை அடிப்படையாகக்கொண்ட சமூகக் கட்டமைப்பு புது நெகிழ்வுத்தன்மையை அடைந்திருக்கிறது. இது ஆதிக்கச் சாதியினரை எல்லா அறிவியல் துறைகளுக்கும் இடப்பெயர்வு செய்துள்ளது. இதனால் அவர்கள் அறிவாளிகளாகப் பார்க்கப்படுகின்றனர். மேலும் கோயில் அர்ச்சனைகளிலும் அவர்களே தொடர்வதால் இன்னும் சமூகவியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கல்லூரிப் பேராசிரியர்கள், குறிப்பாக ஐடி துறையில் ஆதிக்கச் சாதியினர் நிர்வாகத் துறையில் அமர்த்தப்பட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. சாதியின் வீரியத்தைக் கட்டுப்படுத்தாத காரணத்தால் தாராளமயமாக்கல் சாதிப் பிளவுகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“கல்லூரிகளில் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் படும் துன்பங்களை உணர ஆதிக்கச் சாதியினரால் முடியாது. எஸ்சி/எஸ்டி ஆசிரியர்கள் இருப்பது அந்த மாணவர்களை நெறிப்படுத்த உதவும்” என்றும் தெரிவித்துள்ளார்.

“1880-களிலிருந்தே இந்தியர்கள் அமெரிக்கா சென்றிருந்தாலும் அமெரிக்கா 1965 இயற்றிய சட்டத்தின் படி தொழிற்கல்வி பயின்றோர் மட்டும் குடியேறலாம். இதனால் தற்போது அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் நன்கு படித்தவர்கள். இதில் மிகப்பெரும் எண்ணிக்கையில் ஆதிக்கச் சாதியினர் மட்டுமே இருக்கிறார்கள்” என்று அஜந்தா தெரிவித்துள்ளார்.

சாதி பரம்பரையாக வந்திருந்தாலும், இடையில் சிலருக்கு மட்டுமே அளிக்கப்பட்ட உயர்கல்வி அமெரிக்காவிற்குப் பொருளாதார, தொழில்பயிற்சி, கல்வி போன்றவற்றில் திறம்பெற யார் வரவேண்டும் என்பதைத் தீர்மானித்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரிடையே மட்டும் நிலவிய கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அவர்கள் சுலபமாக அமெரிக்காவில் குடியேற வாய்ப்பாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்