Aran Sei

லஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு – ரூ. 25,000 மட்டுமே எடுக்க முடியும்

லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், இன்று (17.11.2020) மாலை 6 மணி முதல் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வரை, பணம் எடுப்பதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில், ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லஷ்மி விலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு உட்பட அனைத்து வகையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில், லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் அதிகபட்சமாக 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். ஒருவரே பல கணக்கு வைத்திருந்தாலும், அந்த அனைத்து கணக்குகளிலும் சேர்த்து கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்தில் அதிகபட்சமாக 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று நிதி அமைச்சகத்தின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மருத்துவ அவசரம், கல்வி கட்டணம், திருமணம் மற்றம் தவிர்க்க முடியாத பிற அவசர காரணங்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்க வைத்திருப்பவர்கள் மேற்கூறிய காரணங்களுக்காக கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்தில் 25,000 ரூபாய்கும் மேல் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத வங்கி அதிகாரி ஒருவர் அரண்செய்-யிடம் பேசும்போது “மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய சங்கடத்தை சந்திக்க உள்ளனர். குறிப்பாக சிறிய தொழில் செய்பவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்” என்று கூறினார்.

“மருத்துவம், கல்வி கட்டணம் போன்ற தேவைகளுக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அதை ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு எப்படி நிரூபிக்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆகவே, அவசர தேவைக்கு கூடவாடிக்கையாளர்கள் உடனடியாக பணம் எடுப்பது சிரமம்தான்” என்று அந்த வங்கி அதிகாரி தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் எஸ் வங்கிக்கும் இதேபோல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடுமையான நெருக்கடியை சந்தித்த அந்த வங்கியை எல்ஐசி உட்பட எஸ்பியை தலைமையிலான கூட்டு நிறுவனங்கள் நிதியளித்து காப்பாற்றின.

“பெரும் முதலாளிகள் செலுத்த வேண்டிய கடன் பாக்கியால் தற்போது தத்தளித்து வரும் லஷ்மி விலாஸ் வங்கியை, எஸ் வங்கியை காப்பாற்றியதுபோல் பொதுத்துறை நிறுவனங்கள்தான் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்