Aran Sei

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமை

தாமஸ் Credit : https://www.newindianexpress.com/

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிதி அமைச்சகத்தின் திட்டத்தை எதிர்ப்பதில் கேரள அரசு உறுதியுடன் இருக்கிறது என்று தி இந்து நாளேடு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 41-வது கூட்டத்தில், “நடப்பு ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீடுகளை மாநிலங்கள் கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யும்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்குரிய ஜிஎஸ்டி இழப்பீடுகளை மாநிலங்கள் கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கினார்.

முதல் வாய்ப்பு, மாநிலங்கள் ஜிஎஸ்டி அமல் செய்ததினால் ஏற்பட்ட பற்றாக்குறை தொகையை (97,000 கோடிகள்) ரிசர்வ் வங்கி மூலமாகக் கடன் பெறுதல். இரண்டாவது வாய்ப்பு, நடப்பு ஆண்டில் மொத்தமாக ஜிஎஸ்டி பற்றாக்குறை 2.35 லட்சம் கோடிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தொகையை முழுமையாகக் கடனாகப் பெற்றுக்கொள்ளுதல். இந்த இரண்டு வாய்ப்பில் ஏதாவது ஒரு வாய்ப்பை மாநிலங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மாநிலங்கள் தங்களது முடிவுகளைத் தெரிவிக்க 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த இரண்டு வாய்ப்புகளையும் கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்கள் நிராகரித்துவிட்டன.

“நடப்பு ஆண்டில் இழப்பீடுகளை வழங்க முடியாததற்குக் கொரோனா மற்றும் ஜிஎஸ்டி அமல் செய்ததன் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையைக் காரணம் காட்ட முடியாது” என்று கேரள மாநில நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் தெரிவித்தார்.

மேலும், “ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். அது மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. மாநிலங்கள் வழக்கமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3 விழுக்காடு அளவுக்குக் கடன் பெறுகின்றன. அந்த மூன்று விழுக்காட்டு எல்லைக்குள் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைச் சேர்க்கக் கூடாது” எனத் தாமஸ் ஐசக் கூறினார்.

“நிதி அமைச்சகம் வழங்கியுள்ள இரு வாய்ப்புகளை ஏற்காத மாநிலங்களுக்கு 2022-ம் ஆண்டு வரையில் இழப்பீடு கிடையாது என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

“ஜிஎஸ்டி இழப்பீடு மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை.  மாநிலங்கள் வழக்கமாகப் பெறும் கடனில் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடக்கூடாது என்பதை நிதி அமைச்சகம் ஏற்கும் பட்சத்தில், ஜிஎஸ்டி-யில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்கள் எவ்வளவு கடன் பெறலாம்? மத்திய அரசு எவ்வளவு கடன் பெறலாம்? எவ்வளவு தொகை 2022-ம் ஆண்டுக்குப் பிறகு கொடுக்கலாம்? ஆகிய பிரச்சினைகளைப் பேசலாம்” என்று தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

“மாநில அரசுகள் தற்போது சந்தித்து வரும் நிதி நெருக்கடியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இடைக்கால நடவடிக்கையாக மாநிலங்களுக்குக் குறைந்தபட்சம் இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியையாவது வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்ற மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தலைமைக் கணக்குக் குழு (சிஏஜி) தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு மாநிலங்களுக்கு முழுமையாக ஜிஎஸ்டி இழப்பீடுகளை வழங்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடிகளை நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கு வழங்கவில்லை.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையில் தீவிரமடைந்துவரும் சச்சரவுகளுக்கு நடுவில் இன்று 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்