Aran Sei

காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்த கேரள அரசு

தினாறு விவசாய விளை பொருட்களுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து வெளியிட்டு, அடுத்த ஒரு ஆண்டில் கூடுதலாக ஒரு லட்சம் டன் காய்கறிகளை  உற்பத்தி செய்ய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்  கேரள முதல்வர் பினராயி விஜயன். மேலும் விவசாய உற்பத்திக்கான சிறந்த சந்தையை உருவாக்கவே இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 27) முதல்வர் பினராயி விஜயன், காய்கறிகள், பழங்கள் மற்றும் கிழங்குகள் உட்பட 16 விவசாய பொருட்களுக்கான அடிப்படை விலையை அறிவித்துள்ளார். நாட்டில் ஒரு அரசு இது போன்ற முயற்சியை எடுப்பது இதுவே முதல் முறை என்றும், கட்டுப்பாடில்லாத விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

‘தி இந்தி’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளின் அடிப்படை விலைகள் (ஒரு கிலோவிற்கு),

வெள்ளை பூண்டு – ரூ. 139,
அன்னாசி – ரூ. 15,
நேந்திரம் வாழைப்பழம் – ரூ. 30,
உருளை கிழங்கு – ரூ. 20,
தக்காளி – ரூ. 8,
பீன்ஸ் பயர் – ரூ. 28.

மேலும் இந்தத் திட்டம் குறித்து பினராயி விஜயன் கூறும்பொழுது, ”பாரம்பரியமாக விவசாயம் செய்பவர்களுக்கும், புதிதாக விவசாயம் செய்ய தொடங்கியிருப்பவர்களுக்கும், இந்த அடிப்படை விலை நிர்ணய திட்டம் உதவியாக இருக்கும். நாடு முழுவதும் விவசாயிகள்  போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதற்கு கேரள அரசு ஆதரவளித்து வருகிறது. கேரளாவில், கடந்த நான்கரை ஆண்டுகளில் விவசாய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அடிப்படை விலை நிர்ணய திட்டமும் அத்தகைய ஒரு திட்டமாகும்.” என்று கூறியுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

முதல் கட்டமாக மரவள்ளிக்கிழங்கு, நேந்திரன் வாழைப்பழம், அன்னாசி பழம், பாவற்காய், வெள்ளரி, புடலங்காய், தக்காளி, முட்டைக்கோஸ் மற்றும் பீன்ஸ் போன்ற பதினாறு விவசாய விளைபொருள்களை அதில் சேர்த்துள்ளனர் என்றும், இந்த அடிப்படை விலை, உற்பத்தி செலவை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்துள்ளது.

”சந்தை விலை காய்கறியின் அடிப்படை விலையை விடக் குறைந்து போனால், அந்த காய்கறியானது அதன் அடிப்படை விலையில் வாங்கப்பட்டு, பணம் விவசாயிகளின் கணக்குகளுக்கு அனுப்பப்படும். விளைபொருள்களின் தரத்தை அடிப்படையாக கொண்டே, அடிப்படை விலை நிர்ணயிக்கப்படும். இந்த அடிப்படை விலையானது, குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து நிர்ணயிக்கப்படும்.” என்று முதல்வர் கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு மகசூல் பருவத்தில் அதிகபட்சம் 15 ஏக்கர் வரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனளிக்கும். இந்த திட்டத்தின் பயனைப் பெற, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்த பின்பு, வேளாண் துறையின் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு செய்தல் நடைமுறை வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

விவசாய வளர்ச்சியை பற்றி குறிப்பிடுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில், மாநிலத்தின் மொத்த காய்கறி உற்பத்தியானது 7 லட்சம் டன்னிலிருந்து 14.72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்றும், நெல் சாகுபடியின் பரப்பளவு 1.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து 2.15 லட்சம் ஹெக்டேராக விரிவடைந்துள்ளது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்கு காரணம் சுபிக்ஷா கேரளம், ஜீவானி போன்ற திட்டங்களை செயல்படுத்தியது தான் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்