Aran Sei

காஷ்மீர்: பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம்

credit: newsclick.in

ம்மு காஷ்மீரில் அரசமைப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட ஓராண்டில் 5 லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர் என்று காஷ்மீர் தொழில்துறை மற்றும் வணிகக் கூட்டமைப்பு (KCCI) தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக பிரித்தது. அதன்பிறகு, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஜம்மு காஷ்மீரில் ஒரு புதிய தொடக்கத்தை உண்டாக்கும் என்று கூறினார். காஷ்மீர் மக்களின் துன்பங்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டது என்றும் காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஈடுபாடுடன் இருகிறது என்றும் அவர் கூறினார்.

இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் முதல் ஆளுநர் ஜி.சி.மர்மூ-வும் அரசு புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஏற்கெனவே, நிரப்ப வேண்டிய காலி பணியிடங்களை நிரப்படும் என்றும் உறுதிபட கூறினார்.

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளர். கல்வி, சேவை, போக்குவரத்து, வணிகம் ஆகிய துறைகள் 40 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளதாக காஷ்மீர் தொழில்துறை மற்றும் வணிக கூட்டமைப்பின் தலைவர் ஷேக் ஆஷிக் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள பல்வேறு துறைகளில் 80 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்படாமல் இருக்கின்றன. அதில் கடைநிலை வேலைகள்தான் அதிகமாக உள்ளன என்று தி வயர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

காலியாக உள்ள 8575 கடைநிலை பணிகளையும் 18,000 உதவி கணக்கர் பதவிகளை நிரப்புவதற்கு சென்ற ஜூன் (2020)-ல் விளம்பரம் செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதினால் காஷ்மீருடன் தொடர்பில்லாத வெளியாட்களும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் 2.5 லட்சம் உயர் கல்வி பெற்ற இளைஞர் பதிவு செய்துள்ளனர் என்று ஜம்மு காஷ்மீரின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சௌரப் பகத் கூறினார்.

உண்மையில், காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களுக்கு 6 லட்சம் இளைஞர் விண்ணப்பித்திருந்தனர். இது ஜம்மு காஷ்மீரில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிகாட்டுகிறது என்று தி வையர் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

ஜனவரி 2016-ம் ஆண்டுக்கும் ஜூலை 2019-ம் ஆண்டுக்கும் இடையில் ஜம்மு காஷ்மீரில் சராசரியாக 15 விழுக்காடு அளவுக்கு மாதாந்திர வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவியதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE)  தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் பிற பகுதியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 விழுக்காடு அளவுக்கு இருந்தது என்று சிஎம்ஐஈ கூறியுள்ளது.

சிஎம்ஐஈ அண்மையில் வெளியிட்ட சுற்றாய்வறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 11.1 விழுக்காடு அளவுக்கு உள்ளது என்றும் இந்தியாவின் பிற பகுதியில் வேலைவாய்ப்பின்மையின் அளவு சராசரியாக 8.3 விழுக்காடு அளவுக்கு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்