Aran Sei

பொதுத்துறை ஹோட்டலை விற்றதில் ரூ.244 கோடி இழப்பு – அருண் ஷோரிக்கு எதிரான விசாரணைக்குத் தடை

ரூ.252 கோடி மதிப்பிலான ராஜஸ்தான் ஹோட்டலை ரூ.7.52 கோடிக்குத் தனியாருக்கு விற்று அரசுக்கு ரூ.244 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கிற்கு ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது என்று livelaw செய்தி தெரிவிக்கிறது.

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்குச் சொந்தமான, ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள லட்சுமி விலாஸ் பேலஸ் ஹோட்டல், வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது தனியாருக்கு விற்கப்பட்டது. அப்போது சொத்து விற்பனை அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி.

இந்த விற்பனை தொடர்பான சிபிஐ விசாரணையின் போது இந்த ஹோட்டல் அதன் மதிப்பை விடக் குறைவாக விற்கப்பட்டது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அருண் ஷோரி மீதும் இன்னும் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்கில் சிபிஐ இரண்டு முறை முடித்து வைக்கும் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அந்த இறுதி அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத ஜோத்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்தப் பிரச்சனையில் சிபிஐ விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்ற மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் வியாழக்கிழமை தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தனக்கு அனுப்பும்படியும், மறு உத்தரவு வரும் வரை 5 மனுதாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் உயர்நீதி மன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் உத்தரவிட்டிருக்கிறார்.

அருண் ஷோரியோடு கூடவே சொத்து விற்பனைத் துறைச் செயலாளர் பிரதீப் பாய்ஜல், மதிப்பீட்டாளர் காந்திலால் கரம்சே, பாரத் ஹோட்டல்ஸ் இயக்குநர் ஜ்யோத்சனா சூரி, லசார்ட் இந்தியா நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் குஹா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதியுமாறு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக livelaw செய்தி தெரிவிக்கிறது.

2001-ம் ஆண்டில் நடைபெற்ற தனியாருக்கு விற்கும் நடைமுறையில் லட்சுமி விலாஸ் ஹோட்டலை பாரத் ஹோட்டல்ஸ் நிறுவனம் ரூ.7.52 கோடி விலைக்கு வாங்கியிருந்தது. இந்தத் தொகை அருண் ஷோரி தலைமையிலான சொத்து விற்பனை அமைச்சகம் நிர்ணயித்த குறைந்தபட்ச விலையை விட 25% அதிகமாகும். இந்தத் தகவல்களை ஜ்யோத்சனா சூரியின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிபிஐயின் இறுதி அறிக்கையை நிராகரித்த விசாரணை நீதிமன்றம், இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 420, 120B ஆகியவற்றின் கீழும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவு 13(1)D உடன் சேர்த்து பிரிவு 13(2)-ன் கீழும் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக மனுதாரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

விசாரணை நீதிமன்றம் மனுதாரர்களைக் கைது பிடியாணை மூலமாக நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டதோடு, உதய்ப்பூரில் உள்ள லட்சுமி விலாஸ் ஹோட்டலைக் கையகப்படுத்தி, உதய்ப்பூர் மாவட்ட ஆட்சியரை அதன் பொறுப்பாளராகவும் நியமித்திருந்தது என்று livelaw செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தன் தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே விசாரணை நீதிமன்றம் தனக்கு எதிராக சில கருத்துகளைச் சொல்லியிருப்பதாக அருண் ஷோரி உயர்நீதி மன்றத்திடம் கூறியிருக்கிறார். சிபிஐ திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் தாங்கள் ஒரு குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்ட முடியாது என்று மற்ற நால்வரும் வாதிட்டுள்ளனர்.

“சிபிஐ இந்த வழக்கில் இரண்டு முறை முடித்து வைக்கும் அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகும் விசாரணை நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது” என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் வாதிட்டார்.

பாஜகவைச் சேர்ந்த அருண் ஷோரி 2017-ம் ஆண்டு, “நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஆதரவு தெரிவித்ததன் மூலம், தான் தவறு செய்து விட்டதாகக் கூறியிருந்தார்” என்று thequint.com செய்தி தெரிவிக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை “மிகப்பெரிய கறுப்புப் பண மாற்றல் திட்டம்” என்றும் “அது இந்தியப் பொருளாதாரத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒரு முட்டாள்தனமான இடி” என்றும் என்டிடிவிக்குக் கொடுத்த பேட்டியில் அவர் விமர்சித்திருந்தார். மேலும் ஜிஎஸ்டி ஒரு “முக்கியமான சீர்திருத்தம்” என்றாலும் அது மோசமாக அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்