Aran Sei

ஐடி சேவை, பிபிஓ – Work From Home நிரந்தரம் – என்ன நடக்கும்?

Image Credit - livemint.com

பிபிஓ மற்றும் ஐடி சேவை நிறுவனங்களுக்கான பதிவு செய்யும் நிபந்தனைகளையும், கடைபிடிப்பதற்கான விதிமுறைகளையும் பெருமளவு ரத்து செய்யும் வழிகாட்டல்களை இந்திய ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சம் நேற்று வெளியிட்டுள்ளது.

“வீட்டிலிருந்து வேலை செய்தல்” (work from home), “எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்தல்”  (work from anywhere) போன்ற கொள்கைகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு இந்த புதிய ஒழுங்குமுறைகள் ஆதாயமாக இருக்கும் என்று லைவ் மின்ட் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இந்த மாற்றங்கள் பிபிஓக்கள் (வணிக அயலகப்பணி), கேபிஓக்கள் (அறிவு அயலகப்பணி), ஐடி சேவைகள், அழைப்பு சேவை நிறுவனங்கள் போன்றவற்றுக்கு பொருந்தும்.

இந்த புதிய விதிமுறைகளின் படி இந்நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை. வங்கி உத்தரவாதங்களை வழங்குதல், நிலையான இணைய எண் (static ip) பெறுதல், அடிக்கடி அறிக்கை வழங்கும் பொறுப்பு, வலைப்பின்னல் வரைபடத்தை வெளியிடுதல் (network diagram), இவற்றை செய்யத் தவறினால் வழங்கப்படும் தண்டனை விதிமுறைகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் மூத்த இயக்குனர் ஆஷிஷ் அகர்வால் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். “இந்த புதிய வழிமுறைகள் ஐடி அயலகப் பணித் துறையில் அதிக வணிகத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும். இந்நிறுவனங்கள், சிறு நகரங்களிலிருந்தும், நாட்டின் தொலைதூர பகுதிகளிலிருந்தும் ஊழியர்களை வேலைக்கு பயன்படுத்திக் கொள முடியும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“‘தொழில் செய்வதை எளிதாக்குவதிலும்’ இந்தியாவை ஒரு தொழில்நுட்ப மையமாக மாற்றுவதற்கும் உறுதியாக உள்ளோம்” என்று பிரதமர் மோடி இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா முழு அடைப்பு காலத்தில் பல ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் தமது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தமது சேவைகள் தடைபடாமல் வணிகத்தை தொடர்ந்து வந்தன.

“ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான இணைய இணைப்பு, தொலைபேசி ஏற்பாடுகள் இவற்றைச் செய்ய வைத்து கடந்த 8 மாதங்களாக பெரிய அளவு இடையூறுகள் இல்லாமல் இந்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் அலுவலக செலவுகளை குறைப்பதன் மூலம் பெருமளவு பணத்தையும் அவை மிச்சப்படுத்தின. எனவே, முழு அடைப்பு தளர்த்தப்பட்ட பிறகும் பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுலவலகத்துக்கு வர வைக்கவில்லை” என்று ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் சியாம் சுந்தர் அரண்செய்யிடம் கருத்து தெரிவித்தார்

உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் : ஷியாம் சுந்தர்

மேலும், “வீட்டிலிருந்தே வேலை செய்யும் பணியாளர்களுக்கு வேலைச் சுமை அதிகமாவதோடு, 24 மணி நேரமும் வேலை செய்யத் தயாராக இருக்கும் படி அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்” என்று அகில இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர் மன்றத்தின் (AIFITE) பொதுச் செயலாளர் வினோத் களிகை கூறுகிறார்.

“தமது வேலை தொடர்பான பிரச்சனைகள், புகார் ஆகியவற்றை முறையிடுவதற்கு தேவையான வழிமுறைகளையும் கூட்டு மனநிலையையும் இந்த பணியாளர்கள் இழந்து விடுவார்கள்” என்று அவர் கவலை தெரிவித்தார்.

பன்னாட்டு முதலாளிகளுக்கான தொழிலாளர் மசோதாக்கள்: ஜி.ராமகிருஷ்ணன்

மேலும் “இந்த பெருந்தொற்று கால மெய்நிகர் கட்டத்திலும் பிரிந்து நில்லாமல் ஒன்றிணைந்து நின்றால் தொழிலாளர் நலனுக்கு எதிரான தற்போதைய போக்கை வெல்ல முடியும்” என்று AIFITE-ன் வினோத் களிகை நம்பிக்கை தெரிவிக்கிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்