Aran Sei

IPO பங்குகள் – சென்ற வார நிலவரம் : ஷியாம் சுந்தர்

Credit : https://www.indiatoday.in

ங்குச் சந்தையில் சென்ற வாரமும் புதிய பங்கு வெளியீடுகள் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தைத் தந்தன.

புதிய பங்கு வெளியீடு செய்யப்பட்ட இரண்டு பங்குகள் சென்ற வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. அதில் முதலீட்டாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கெம்காம் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் (Chemcom Speciality Chemicals) நிறுவனப் பங்கு 110 சதவீத லாபத்துடன் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கிற்கு 340 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் பங்கு 731 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டது. அதிகபட்சமாக கடந்த இரண்டு தினங்களில் 877 ரூபாய் வரை விலை போனது. இது ஏறக்குறைய 250 சதவீதம் வரை லாபம் தரக்கூடிய வாய்ப்பினை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது.

விலை அதிகரிக்கத் தொடங்கிய பிறகு பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதனால் விலை குறைத்து வெள்ளிக் கிழமை சந்தை மூடப்படும் போது 585 ரூபாய் என்ற அளவிற்கு அந்தப் பங்கு விலை போனது.

பங்குச் சந்தையைச் சார்ந்த மற்றொரு நிறுவனமான கம்ப்யூட்டர் எய்டட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (Computer Aided Management Services (CAMS) என்ற நிறுவனமும் இந்த வாரம் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கு ரூ.1230 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்தப் பங்கு ரூ.1518 என்ற விலையில் பட்டியல் இடப்பட்டது. இந்தப் பங்கினையும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் விற்கத் தொடங்கியதால் விலை குறைந்து வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை மூடப்படும்போது ரூ.1402 என்ற விலையில் வர்த்தகமானது.

இந்த வாரம் மாசேகான் டாக் (Mazagon Dock) என்ற பங்கிற்கு முதலீட்டாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் பங்கு வெளியீட்டில் பங்கு பெறுவதற்கு 157 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. சில்லறை முதலீட்டாளர்கள் 37 மடங்கு விண்ணப்பித்துள்ளனர்.

மினி ரத்னா என வகைப்படுத்தப்பட்ட, நீர்மூழ்கி மற்றும் கப்பல் கட்டுமான நிறுவனமான மாசேகான் டாக் (Mazagon Dock), இந்திய அரசின் “தற்சார்பு இந்தியா” என்ற கொள்கையால் மிகப் பெரிய பலன் அடையும் என்று முதலீட்டாளர்கள் கருதினர். அதனால் இந்தப் பங்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

மேலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யுடிஐ ஏஎம்சி (UTI AMC) இந்த வாரம் முதன்மைப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. அதற்கு முதலீட்டாளர்களிடம் சுமாரான ஆதரவு இருந்தது. அதன் பங்குகள் முழுமையாக விற்பனையாகி உள்ளன.

ஆனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் புதிய பங்கு வெளியீடுகளை விற்பது கவலை தரும் விஷயமாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் லாப நோக்கில், குறுகிய காலத்தில் பங்கு விலையை அதிகரிக்கச் செய்து, தமது பங்குகளை விற்று விட்டு வெளியேறி விடுகின்றனர். பங்குச் சந்தையைப் பற்றி அதிகம் அறியாத அனுபவம் இல்லாதவர்கள் அதிக விலை கொடுத்துப் பங்குகளை வாங்கி நஷ்டம் அடைகின்றனர். அதனால் புதிய வெளியீடுகளில் மிகவும் கவனத்துடன் முதலீட்டாளர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

இந்த எச்சரிக்கை உணர்வு கிரே மார்க்கெட் பிரீமியத்தில் எதிரொலித்தது. மாசேகான் டாக் (Mazagon Dock) நிறுவனத்தின் கிரே மார்க்கெட் பிரீமியம் சென்ற வார ஆரம்பத்தில் 100 சதவிகிதத்திற்கு மேல் இருந்தது. ஆனால் இப்பொழுது 70 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

யுடிஐ ஏஎம்சி (UTI AMC) நிறுவனத்தின் கிரே மார்க்கெட் பிரீமியம் 20 சதவீதத்தில் இருந்து லாபம் எதுவும் இல்லாத நிலைக்குக் குறைந்துள்ளது. இந்தப் பங்குகளையும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் விற்று விடுவார்கள் என்ற அச்சமே இந்த விலை குறைப்பிற்குக் காரணமாகும்.

அடுத்த வாரத்தில் சந்தையின் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?

அமெரிக்க அதிபரின் உடல்நிலை முக்கியமான காரணியாக உள்ளது. மேலும் இந்திய அரசு பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த புதிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதைப் பற்றி அறிவிக்கவுள்ளது. அது எந்த அளவிற்கு நிறுவனங்களுக்கு லாபமாக மாறும் என்பதைப் பொறுத்து சந்தையில் செயல்பாடு மாறும். மேலும் நமது நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக குணமடைந்த நபர்களின் விகிதம் அதிகரிப்பது சந்தையில் பாசிட்டிவாகப் பார்க்கப்படுகிறது.

பொதுவாக சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்ற நிலையிலேயே உள்ளது. இதனை உணர்ந்து ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் நல்ல தரமான பங்குகளை வாங்குவது லாபத்தைத் தரும்.

– ஷியாம் சுந்தர்
(கட்டுரையாளர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்