Aran Sei

பங்குச் சந்தையில் ஐபிஓ பரபரப்பு : ஷியாம் சுந்தர்

பிஓ (Initial public offer) என்ற முதன்மை பங்கு விற்பனை என்பது ஒரு நிறுவனம் புதிதாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது தமது பங்குகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வு ஆகும்.

தற்போது பங்குச் சந்தையில் பல புதிய பங்கு வெளியீடுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த புதிய பங்கு வெளியீடுகள் கடந்த மாதத்திலிருந்து முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதில் சக்கைப்போடு போட்டது ஹேப்பியஸ்ட் மைண்ட் (Happiest Mind) என்ற நிறுவனத்தின் பங்கு விற்பனையாகும். இந்தப் பங்கிற்கு 151 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதாவது ஒரு பங்கினை வாங்குவதற்கு 151 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீடுகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் ஹேப்பியஸ்ட் மைண்ட் (happiest mind) பங்கு வெளியீடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை பங்குச் சந்தைக்கு சாதகமான அம்சமாக பார்க்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் அதிக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்த முதன்மை பங்கு விற்பனைகளில் (ஐபிஓ) ஹேப்பியஸ்ட் மைண்ட் (happiest mind) எட்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது

இந்தப் பங்கும் விண்ணப்பித்தவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க பங்கு வெளியீட்டின் போது விண்ணப்ப விலையை விட அதிக ஏற்றத்தோடு பட்டியலிடப்பட்டது. ரூ. 166-க்கு விண்ணப்பிக்கப்பட்ட ஒரு பங்கு 111 சதவீத லாபத்துடன் ரூ.351-க்கு பங்குச் சந்தையில் முதல் நாளில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்தப் பங்கை விண்ணப்பித்து பெற்றவர்கள் ஜாக்பாட் அடித்ததுபோல லாபம் அடைந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவரான அசோக் சூட்டா விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர். பின்பு தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு மைண்ட் ட்ரீ (mindtree) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அதன்பிறகு ஹேப்பியஸ்ட் மைண்ட் (Happiest Mind) என்ற இந்தப் புதிய நிறுவனத்தை டிஜிட்டல் துறையில் ப்ராஜெக்ட் செய்கின்ற நிறுவனமாக வளர்த்தெடுத்தார். நீண்ட காலத்தில் டிஜிட்டல் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு இந்த பங்கு மூலதன வெளியீடு மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமாகும்.

இதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த வாரங்களில் மேலும் 3 புதிய பங்கு வெளியீடுகள் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றன.

மருந்துத் துறையைச் சேர்ந்த கெம்காம் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் (Chemcom Speciality Chemicals) கடந்த வாரம் பங்கு மூலதன வெளியீட்டை மேற்கொண்டது. இந்தப் பங்கிருக்கும் 149 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. மேலும் பங்குச் சந்தை சார்ந்த கேம்ஸ் (CAMS) நிறுவனத்திற்கு 40 மடங்கு விண்ணப்பங்களும், பங்குத் தரகு நிறுவனமான ஏஞ்சல் புரோக்கிங் சர்வீசஸ் நிறுவன பங்கு வெளியீட்டிற்கு நான்கு மடங்கு விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இந்த மூன்று நிறுவனங்களின் பங்குகளும் அடுத்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். இந்த மூன்று பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தரும் என்று சந்தை வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

கிரே மார்க்கெட் (Grey market) என்பது புதிதாக வெளியிடப்படும் பங்கு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன்பு வாங்கி விற்பதற்கான சந்தையாகும். அந்த கைமாறும் விலையைப் பொறுத்து பங்கு சந்தையில் அதிகாரபூர்வமாக பட்டியலிடப்பட்டு வர்த்தகம் தொடங்கும் போது விண்ணப்பத்தின் மூலம் பங்கை பெற்றவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை கணிக்கமுடியும்.

ஒரு பங்கிற்கு எவ்வளவு டிமாண்ட் உள்ளது, எத்தனை மடங்கு விண்ணப்பிக்கப்பட்டது, நிறுவனத்தின் செயல்திறன் போன்றவற்றை பற்றிய முதலீட்டாளர்களின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு கிரே மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுகின்றன. இந்த மூன்று நிறுவனங்களின் கிரே மார்க்கெட் பிரீமியம் (விண்ணப்ப விலையை விட விலை ஏற்றம்) லாபகரமாக உள்ளது அந்தப் பங்குகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முதலீட்டாளர்களிடம் புதிய பங்கு வெளியீட்டுக்கு கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை நிலவியது. அதனால் பல புதிய நிறுவனங்கள் தமது பங்குகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தன.

இப்பொழுது முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த ஆர்வம் பல புதிய நிறுவனங்களுக்கு பங்கு வெளியீடு செய்வதற்கு வாய்ப்பினை தந்துள்ளது. இந்த வாரமும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த யுடிஐ ஏஎம்சி (UTI AMC) நிறுவனமும், கப்பல் கட்டுமானத்தில் தேர்ச்சி பெற்ற மாசாகான் டாக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Mazagon Dock Infrastructure) என்கின்ற நிறுவனமும், கட்டுமானத் துறையைச் சேர்ந்த Likhita Infrastructure (லிக்கிதா இன்ஃப்ராஸ்ட்ரக்சர்) என்ற நிறுவனமும் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள இருக்கின்றனர்.

குறுகிய காலத்தில் ஐபிஓ மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று அனைத்து பங்கு வெளியீட்டிலும் சிலர் பங்கு பெறுகின்றனர். பங்குச் சந்தை என்பது ஆழ்ந்த கடலைப் போன்றது. பிறர் செய்கிறார்கள், குறுகிய காலத்தில் லாபம் கிடைக்கிறது என்று சந்தையைப் பற்றி தெரியாமல் முதலீடு செய்வது பல சமயங்களில் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பங்குச்சந்தை அதிக ஏற்றத்தை அடையவில்லை. பல நல்ல பங்குகள் பங்குச் சந்தையில் குறைந்த விலையில் வர்த்தகம் ஆகின்றன. அதனால் புதிய பங்குச் சந்தை வெளியீடுகளை எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் வாங்குவதற்கு பதிலாக நல்ல தரமான பங்குகளை சந்தையில் வாங்குவது நீண்ட காலத்தில் லாபத்தைக் கொடுக்கும்.

என்றாலும் குறுகிய காலத்தில் பலன் பெற விரும்புபவர்கள் நன்கு ஆராய்ந்து புதிய பங்கு வெளியீடுகளில் விண்ணப்பிப்பது லாபத்தை கொடுக்கலாம். இந்த புதிய பங்கு வெளியீடுகள் பங்குச்சந்தையை இந்த வாரம் பரபரப்பாக வைத்திருக்கும் என்று நிச்சயமாகக் கூறலாம்.

(கட்டுரையாளர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஐடி துறையில் பணியாற்றுபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்