Aran Sei

EMI வட்டி மீது வட்டி தள்ளுபடி – எப்படி பலன் பெறுவது? : ஷியாம் சுந்தர்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடன் தவணைகளை ஆறு மாதத்திற்கு செலுத்த வேண்டாம் என்ற சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தது (EMI Moratarium). இதனால் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த மக்கள் ஆறு மாதங்கள் வங்கிக் கடன் தவணைகள் செலுத்துவதை தள்ளி வைக்க முடிந்தது.

இந்தச் சலுகை ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து தவணை செலுத்துவதை நீட்டித்து சலுகைகள் வழங்கப்பட்டால் தனிநபரின் கடன் சுமை ஏறும். வங்கிகளில் வாராக்கடனும் அதிகரிக்கும் என்ற வகையில் இந்தச் சலுகை 6 மாதத்தோடு நிறுத்தப்பட்டது.

என்றாலும் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தனி நபர்களோ, நிறுவனங்களோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அடிப்படையில் கடன் தவணை தொகையை மறுசீராய்வு செய்து கொள்ளலாம், அதன்மூலம் குறைந்த மாதத் தவணையை செலுத்த வழி செய்து கொள்ளலாம், தகுதியின் அடிப்படையில் தேவையானவர்களுக்கு ஒரு ஆண்டு கூட கடன் தவனைகளுக்கு விலக்கு அளிக்கப் படும் என்று அறிவித்துள்ளது. பிற வங்கிகளும் இந்தச் சலுகைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.

ஆறுமாத ஊரடங்கு காலத்தில் தள்ளி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டி மீது கூட்டு வட்டி கணக்கீடு செய்து அதனையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் கூறி வந்தன.

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட அரசின் ஊரடங்கு நடவடிக்கை காரணமாகத்தான் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டன. வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையும், நிறுவனங்களை திறக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. அதனால்தான் கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் வங்கிகள் வட்டிக்கு கூட்டு வட்டி கணக்கீடு செய்யும் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியது.

பேரிடர் காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் கூட்டு வட்டியாவது வசூலிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டு வட்டி கணக்கீடு செய்வதை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமது கருத்தை கூறினர். என்றாலும் அரசு இது தொடர்பாக தமது கருத்தை தெரிவிக்க அவகாசம் தந்து இருந்தனர்.

இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் அரசு தமது கருத்தை நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி கடன் தவணை செலுத்தாதவர்கள் கூட்டு வட்டி செலுத்தத் தேவையில்லை. வங்கிகள் கூட்டு வட்டி வசூலிக்க கூடாது. இதன் காரணமாக வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுசெய்யும் என்று தெரிவித்தது.

மேலும் இந்தச் சலுகை 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற தனி நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ மட்டும்தான் பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இந்த சலுகை வீட்டுக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் போன்ற அனைத்து வகையான கடன்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது.

இது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாகும். ஒருவர் 50 லட்சம் ரூபாய் கடன் நிலுவை வைத்திருந்தார் என்று வைத்துக்கொண்டால் தோராயமாக 40 ஆயிரம் ரூபாய் வட்டியாக மாதத்திற்கு கட்டுவார் (10 சதவீத வட்டியில்). ஆறு மாதத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும். கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டால் 5700 ரூபாய் வரை அவருக்கு தள்ளுபடி கிடைக்கும். முழு வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் வங்கிகள் தற்போது உள்ள நிலையில் இதற்கு சாத்தியமே இல்லை. இந்த நிலையில் கூட்டு வட்டியாவது தள்ளுபடி செய்யப்பட்டதே என்று அவர் மகிழ்ச்சி அடையலாம்.

சாமி கொடுத்தாலும் பூசாரி கொடுப்பாரா என்பதுபோல இல்லாமல் அரசு சலுகை அறிவித்த இந்த சலுகையை வங்கிகள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு வாடிக்கையாளர் இந்தப் பலன்களை பெற முடியும்.

கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தமது வங்கிகள் இந்த சலுகைகளை வழங்குகிறார்கள் என்பதை கேட்டு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்தச் சலுகை நமக்குக் கிடைப்பதை என்பதை உறுதிப்படுத்த முடியும்.

வங்கிகளும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட தமது வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகைகளை வழங்க வேண்டும். புதுக் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் வங்கிகள் பெரும்பாலான நேரத்தில் பழைய கடன்களுக்கு அதுபோல தள்ளுபடி தருவதில்லை. அவ்வாறு இல்லாமல் அரசு அறிவித்த இந்தச் சலுகை தமது வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். அதுதான் தமது வாடிக்கையாளர்களுக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் வங்கிகள் செய்யும் கைமாறாக அமையும்.

ஷியாம் சுந்தர்
(கட்டுரையாளர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்