Aran Sei

வாராக் கடன் பிரச்சனை: தீர்க்குமா திவால் சட்டத்திருத்தம்?

credit: moneycontrol.com

திவால் சட்டத்தொகுப்பில் இரண்டாவது திருத்தம் சென்ற சனிக்கிழமை (செப்டம்பர் 19) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் திவால் சட்டத்தொகுப்பு (Insolvency and Bankruptcy code) 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கடன் செலுத்த முடியாமல் திவாலான நிறுவனங்களுக்கான தீர்வாக திவால் சட்டத்தொகுப்பு கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்துக்கு முன் ஒரு நிறுவனம் திவால் என்று அறிவிக்கப்படுவது சிக்கல் நிறைந்ததாக இருந்தது. அது மட்டுமல்லாமல் திவாலான நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களை முறையாக வசூல் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் இன்றி இருந்தது.

கடந்த சனிக்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சட்டத்திருத்தத்தின்படி, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதிலிருந்து ஆறு மாதக் காலத்துக்கு இடையில் திவாலான நிறுவனங்களை திவாலாகிவிட்டன என்று அறிவிக்க முடியாது.

இந்த மசோதா ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை மாற்றீடு செய்துள்ளது.

“திவால் சட்டத்தொகுப்பு, நிறுவனங்கள் பட்ட கடன்களை மீட்பதற்கான சட்டம் கிடையாது என்றும் நிறுவனங்கள் வசமிருந்த கடன்களை மீட்பதை விட அவற்றை தொடர்ந்து உயிர் வாழ வைப்பது தான் முக்கியமானது” என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மாநிலங்களவையில் கூறினார்.

“சிறுகுறு தொழிலகங்களின் மூலதன வரம்பு ஒரு லட்சத்திலிருந்து ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் கீழ் மூலதனம் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு திவால் சட்டத்தொகுப்பு பொருந்தாது எனவே, சிறுகுறு தொழிலகங்கள் பாதிப்புக்குள்ளாகாது”

“இந்த விலக்கு என்பது கொரோனா காலத்தில் திவாலான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மார்ச் 24-ம் தேதிக்கு முன் திவால் செயல்முறைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இது பொருந்தாது” என்றும் நிதி அமைச்சர் பேசினார்.

திவால் சட்டத்தொகுப்பில் கொண்டு வரும் இந்த திருத்தத்தை விமர்ச்சித்து நாடாளுமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.கே. ராகேஷ், இந்த சட்டத்திருத்தம் வங்கி துறையை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்று கூறினார்.

“வங்கிகளில் ரூ 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வாராக் கடனாக மாறியுள்ள நிலையில் இந்த திவால் சட்டத்தொகுப்பு கார்ப்பரேட் மோசடிகாரர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும்” என்று அவர் குறிப்பிட்டர்.

திவால் சட்டத்தொகுப்பில் கொண்டு வரப்பட்ட திருத்தம் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் ஜோதி சிவஞானத்துடன் அரண் செய் பேசிய போது, “வங்கிகளில் வாராக் கடன் சுமை மலை போல் குவிந்து வருகிறது. இந்த வாராக் கடன் பிரச்சனையை எதிர்க்கொள்வதற்கு மாறாக அரசு அதைத் தள்ளிவைக்கிறது.

வாராக் கடன் பிரச்சனையை எதிர்கொள்ளாமல் தள்ளிவைப்பதானது பொருளாதாரம் மீதான நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தும்” என்று அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்