Aran Sei

‘இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும்’ – நிர்மலா சீதாராமன்

Image Credits: New Indian Express

டப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக இருக்கும் அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகில் தான் இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி கூட்டமைப்பு (சிஇஆர்ஏ) நடத்தும், இந்தியா எரிசக்தி மன்றத்தின் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகில் தான் இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

“அரசு, வாழ்வாதாரத்தை காட்டிலும் உயிருக்கு முன்னுரிமை அளிப்பதால், மார்ச் 25 முதல் கடுமையான பொது முடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டது. பொது முடக்கம் தொற்றை சமாளிப்பதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய அவகாசம் அளித்தது,” என அவர் பேசியுள்ளார்.

“இதற்கு முதன்மையான காரணம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) இந்தியப் பொருளாதாரம் 23.9% சுருங்கியது. பொது முடக்க தளர்வுகளால் பெரு நிறுவன பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்கின்றன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பண்டிகை காலம் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும். 3-வது மற்றும் 4-வது காலாண்டில் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சி பெறலாம்,” என்று அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

“ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 2020-மார்ச் 2021 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தைதான் நெருங்கும். அடுத்த நிதியாண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும்,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

“பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க, பொது செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்பதில்தான் அரசு கவனமாக இருக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்