Aran Sei

இந்தியாவின் ஏற்றுமதி உயர்வு: தற்காலிகமானதா? நிரந்தரமானதா?

credit: indianexpress.com

ந்தியாவின் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 5.27 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவின் மூலமாகத் தெரியவருகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி பொது முடக்க காலத்துக்கு முன்பே பலவீனமான நிலையில் இருந்தது. ஜூன் 2019-ம் ஆண்டிலிருந்தே ஏற்றுமதி வளரவில்லை. இந்நிலையில், மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டுமே வேகமாகச் சரிந்தது. இதன் விளைவாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியா இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் பதிவாகியது.

இந்நிலையில், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சம் செப்டம்பர் மாதத்துக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் மாத முடிவில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியின் அளவு 2,740 கோடி அமெரிக்க டாலர்களாகவும் மொத்த இறக்குமதி 3 ஆயிரத்தி 3 கோடி அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.

செப்டம்பர் மாதத்தில் இறக்குமதி 19.6 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், ஏற்றுமதி 5.27 விழுக்காடு அதிகரித்திருப்பதாக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு செய்தியை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இறக்குமதியில் ஏற்பட்ட சுருக்கம் மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாகுறை 290 கோடி அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) ஏற்றுமதி 21.4 விழுக்காடு அளவுக்குச் சரிந்துள்ளது என்றும் இறக்குமதி 40.1 விழுக்காடு சரிந்துள்ளது என்றும் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அரையாண்டுக் காலத்தில், தங்கம் மற்றும் எரிப்பொருள் அல்லாத ஏற்றுமதிகள் 11.1 விழுக்காடு அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேநேரத்தில், தங்கம் மற்றும் எரிப்பொருள் அல்லாத இறக்குமதிகள் 13.3 விழுக்காடு அளவுக்குச் சரிந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதிகபட்சமாகச் சீனாவுக்கு 20.8 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவுக்கு 15.5 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அயல் நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவது செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முதன்மை வர்த்தகக் கூட்டாளியான சீனாவிலிருந்து இந்தியா 10.1 விழுக்காடு குறைவாக இறக்குமதி செய்துள்ளது என்று வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உலக சரக்கு ஏற்றுமதி 21 விழுக்காடு சரிந்துள்ளது. இது உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2009-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட சரிவுடன் ஒப்பிடத்தக்கது என்று உலக வர்த்தக அமைப்பு தொகுத்துள்ள தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா-வை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி ஏற்றுமதிசார் தொழில்துறைக்கு உந்துசக்தி வழங்குவதாகப் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழிலாளர்களை அதிகமாகப் பணியில் அமர்த்தக்கூடிய ஏற்றுமதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. இது மிகப்பெரிய பிரச்சினையாகும் என்று பொருளாதார ஆய்வாளர் ராகுல் ஜேகப் மிண்ட் நாளேட்டில் எழுதியுள்ளார்.

மோடி அரசாங்கத்தின் ’தற்சார்பு இந்தியா’ திட்டம் சிறுகுறு ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இறக்குமதி விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள், ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் உள்ளீடுகளின் விலையை அதிகரித்துள்ளது என்றும் ராகுல் ஜேகப் குறிப்பிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்