Aran Sei

வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு

கெய்ர்ன் எனர்ஜி - Image Credit : Business Standard

பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் மீது இந்திய அரசு வரி விதித்தது தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில், அந்நிறுவனம் தொடுத்த வழக்கில் இந்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.

அக்டோபர் மாதம் வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக தொடுத்திருந்த, வரி விதிப்புக்கு எதிரான வழக்கில், இந்திய அரசு தோல்வி கண்ட பிறகு, சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும்.

வோடஃபோன் வரி வழக்கில் இந்திய அரசு தோல்வி – விளைவு என்ன?

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் மீது இந்திய அரசு வரி விதித்தது செல்லுபடியாகாது என்று தி ஹேகில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கெய்ர்ன் வரி பிரச்சனை வரி தகராறு இல்லை, வரியுடன் தொடர்புடைய முதலீட்டு தகராறு, எனவே அது தனது நீதி அதிகார வரம்புக்குள் வருகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கு, 2006-7-ம் ஆண்டில் யுகேவின் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கச்சா எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் நிறுவனம் தனது இந்தியத் தொழிலை மறுவடிவமைப்பு செய்த போது கிடைத்த ரூ 24,500 கோடி மூலதன ஆதாயத்தின் மீதான வரி விதிப்பு தொடர்பானது என்று பிசினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி தெரிவிக்கிறது.

இந்திய அரசு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து வரி நிலுவைக்காக வசூலித்த பகுதியளவு தொகையையும் வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெய்ர்ன் எனர்ஜிக்குச் சொந்தமான பங்குகளை விற்ற தொகை, அதற்குச் சொந்தமான பங்குகளின் லாப ஈவுத் தொகை, கெய்ர்ன் எனர்ஜிக்குத் திருப்பித் தரப்பட வேண்டிய ரூ 1,590 கோடி வரி மற்றும் நீதிமன்ற செலவுகள் மற்றும் அபராதம் உள்ளிட்டு $120 கோடியை (சுமார் ரூ 9,000 கோடி) வட்டியோடு திருப்பிக் கொடுக்குமாறு நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு மொத்த இழப்பு $140 கோடியாக இருக்கும் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.

நமது நாட்டில் ஒரு சொத்து விற்கப்படும் போது, அதன் மூலம் கிடைத்த மூலதன ஆதாயம் (வாங்கிய விலையை விட விற்ற விலையின் அதிகிரப்பு), விற்பவருக்குக் கிடைத்த லாபமாகக் கருதப்பட்டு அதன் மீது மூலதன ஆதாய விதி விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள், தமது மூலதன கொடுக்கல் வாங்கல்களை, வெளிநாட்டில் (வரியில்லா தீவுகளில்) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக செய்து கொள்கின்றன. அதன் மூலம் இந்தியாவில் அது தொடர்பான மூலதன ஆதாய வரி செலுத்துவதை தவிர்த்துக் கொள்கின்றன.

இது குறித்த தெளிவின்மையை நீக்குவதற்கு, 2012-ம் ஆண்டு இந்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, இந்தியாவில் செயல்படும் மற்றும் சொத்துக்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் கைமாறுவது தொடர்பான மூலதன பங்குகளின் விற்றல்/வாங்கல், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக நடந்திருந்தாலும், அதற்கான மூலதன ஆதாய வரியை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.

யுகேவைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் முந்தைய 20 ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பான ராஜஸ்தான் எண்ணெய் வயல் உள்ளிட்ட சொத்துக்களை தன் வசம் வைத்திருந்தது.

  • அவற்றை கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வைத்திருந்தது.
  • கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் வரியிலா சொர்க்கமான கேமன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டதாகும்.
  • அது, கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 100% சொந்தமான துணை நிறுவனமாகும்.
  • கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ், கெய்ர்ன் எனர்ஜிக்கு 100% சொந்தமான நிறுவனமாகும்.

இந்திய பங்குச் சந்தையில் தனது பங்குகளை விற்பதற்கு தயாரிப்பாக கெய்ர்ன் யுகே நிறுவனம், கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ்  நிறுவனத்தின் பங்குகளை கெய்ர்ன் இந்தியா என்ற புதிய நிறுவனத்துக்கு மாற்றியது. கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு இந்தியாவில் உள்ள சொத்துக்கள் இந்த புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன.

இதற்குப் பதிலாக, கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் 69% பங்குகள் கெய்ர்ன் யுகே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. இவ்வாறாக, கெய்ர்ன் எனர்ஜி, அதன் துணை நிறுவனமான கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் மூலமாக கெய்ர்ன் இந்தியாவில் 69 சதவீதம் பங்குகளை வைத்திருந்தது.

அதன் பிறகு உடனடியாக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கான பங்குகள் பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டன.

இந்தப் பரிவர்த்தனை மூலமாக கெய்ர்ன் யுகேவுக்கு ரூ 24,503.5 கோடி மூலதன ஆதாயம் கிடைத்ததாக வருமான வரித்துறை வாதிட்டது. அந்த மூலதன ஆதாயத்தின் மீது ரூ 10,250 கோடி வரி செலுத்துமாறு கெய்ர்ன் யுகே நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

2011-ல் கெய்ர்ன் எனர்ஜி, கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை, அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்த குழுமத்துக்கு $870 கோடிக்கு விற்று விட்டது. வருமான வரித்துறையின் தடை காரணமாக 9.8 சதவீதம் பங்குகளை மட்டும் தன் வசம் வைத்திருக்கிறது.

கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகளுக்கு சேர வேண்டிய லாப ஈவுத் தொகைகளை கைப்பற்றுவது, அரசு திருப்பிக் கொடுக்க வேண்டிய வரியை தக்க வைத்துக் கொள்வது, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகளை விற்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் அரசு இந்த வரித் தொகையின் ஒரு பகுதியை வசூலித்திருந்தது.

இப்போது, கெய்ர்ன் எனர்ஜியிடமிருந்து பங்குகளை கைப்பற்றிய 2014-ம் ஆண்டில் அவற்றின் விலையான ரூ 330-ஐ அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-ல் வருமான வரித்துறை பங்குகளை ரூ 220 முதல் ரூ 240 விலையில்தான் விற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசு மேல்முறையீடு செய்யலாம்.

இந்தத் தீர்ப்பை கவனமாக பரிசீலித்து, வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப் போவதாக இந்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கெய்ர்ன் வழக்குக்கு முன்னதாக வோடபோன் மீதான வரி விதிப்பு தொடர்பான வழக்கில் இந்திய அரசு தோல்வியடைந்திருந்தது.

2007-ம் ஆண்டு வோடபோன் நிறுவனத்தின் நெதர்லாந்து கிளை கேமன் தீவில் பதிவு செய்யப்பட்ட சிஜிபி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (CGP Investments) என்ற நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளை $1,120 கோடி டாலருக்கு (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.80 ஆயிரம் கோடி) வாங்கியது. இந்த வர்த்தகத்தின் மூலம் பிரபல இந்தியத் தொலைதொடர்பு நிறுவனமான ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தின் 67 சதவீதப் பங்குகள் வோடபோன் வசம் ஆகியது. இந்தியாவைச் சேர்ந்த ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனம் ஹட்ச் (Hutch) என்ற பிராண்டில் இந்தியாவில் தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வந்தது.

மேலே சொன்ன மூலதனப் பரிவர்த்தனைக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரியை வோடபோன் நிறுவனம் செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை வரி நோட்டீஸ் அனுப்பியது. நீண்ட கால மூலதன வரியாக $150 கோடி (இந்திய மதிப்பில் ரூ.11,000 கோடி) வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று வருமானவரி ஆணையம் உத்தரவிட்டது.

வோடபோன் நிறுவனம், `தான் வாங்கியது வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம். இந்த மூலதனப் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறவில்லை. இந்தியச் சட்டங்கள் இந்த வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக நீண்ட கால மூலதன வரி எதுவும் தனது நிறுவனம் செலுத்த தேவையில்லை’ என இவ்வாறு அறிவித்தது. இந்திய உச்சநீதி மன்றம் வருமான வரித்துறையின் வரி விதிப்பை நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து, மூலதன ஆதாயம் தொடர்பான வருமான வரிச் சட்டத்தின் பிரிவுக்கு கூடுதல் விளக்கம் தெரிவிக்கும் வகையில், பங்கு பரிவர்த்தனைகள் வெளிநாட்டில் நடந்தாலும், இந்தியாவில் உள்ள சொத்துக்கள் கைமாறினால் வரி செலுத்தப்பட வேண்டும் என்று 2012-ல் சட்டம் திருத்தப்பட்டது.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து வோடஃபோன் தொடர்ந்த வழக்கிலும், கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இந்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தது.

வோடபோன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான கடைசி நாள் நேற்று (மூன்று மாதங்களுக்குள் முறையீடு செய்ய வேண்டும்) ஆகும். ஆனால், இதுவரை அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று money control செய்தி வெளியிட்டுள்ளது.

கெய்ர்ன வழக்கில் இதே போன்ற வரி விதிப்பு தொடர்பாக இரண்டாவது தோல்வியை இந்திய அரசு எதிர்கொண்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும், வருமான வரிச் சட்டத்தில் உள்ள தெளிவின்மையை பயன்படுத்தி மொத்தம் ரூ 20,000 கோடி வரையில் வரி செலுத்தாமல் லாபம் அடைந்திருக்கின்றன. அந்தத் தெளிவின்மையை நீக்கி வரி விதிப்பதற்கு இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சர்வதேச நடுவர் நீதிமனங்கள் தீர்ப்பு சொல்லியிருக்கின்றன.

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் இந்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்