Aran Sei

“வரிவிதிப்பு நாட்டின் இறையாண்மை உரிமை” – வோடபோன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

வோடபோன் நிறுவனம், இந்தியாவில் தொலை தொடர்பு சேவை வழங்கி வந்த ஹட்ச் எஸ்ஸார் நிறுவனத்தை வாங்கியதில், இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய மூலதன வரி விவகாரத்தில், இந்திய அரசுக்கு எதிரான சர்வதேச நடுவர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில், அதை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

வோடஃபோன் வரி வழக்கில் இந்திய அரசு தோல்வி – விளைவு என்ன?

இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் நிறுவனம், 2007-ம் ஆண்டு ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் நிறுவனத்திடமிருந்து ஹட்ச் மொபைல் சேவைகளை வாங்கியிருந்தது. ஆனால், இந்தப் பங்கு விற்பனை இந்தியாவுக்கு வெளியில் உள்ள, வோடபோனின் நெதர்லாந்து கிளைக்கும் ஹட்சிசன்  ஹாங்காங்-ன் துணை நிறுவனமான கேமன் தீவில் பதிவு செய்யப்பட்ட சிஜிபி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நடத்தப்பட்டது.

இதன் மூலம் இந்தியாவில் ஹட்ச் என்ற பிராண்டில் மொபைல் தொலைபேசி சேவை வழங்கி வந்த ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தின் 67% பங்குகள் வோடபோனுக்குச் சொந்தமாயின.

பங்குகள் விற்பனை இந்தியாவுக்கு வெளியில் நடந்ததால் வரி செலுத்தத் தேவையில்லை என்று நிறுவனங்கள் வாதிட்டன, இந்தியாவில் உள்ள சொத்துக்கள் கைமாறியதால் அதன் மீதான மூலதன ஆதாயத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசின் வருமான வரித்துறை கூறியது.

எனவே, ஹட்சிசன் எஸ்ஸார் செலுத்த வேண்டிய மூலதன ஆதாயத் தொகையை பிடித்து செலுத்தத் தவறியதற்காக, ரூ 22,000 கோடிக்கு அதிகமாக வரியும் அபராதமும் செலுத்துமாறு வருமான வரித்துறை வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வரி விதிப்புக்கு எதிரான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் வருமான வரித்துறைக்கு எதிராக தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து வருமான வரிச் சட்டத்தின் மூலதன ஆதாயம் தொடர்பான பிரிவிற்கு விளக்கம் அளிக்கும் திருத்தத்தைக் கொண்டு வந்தது. வோடபோன் நிறுவனத்தை வரி செலுத்துமாறு மீண்டும் வலியுறுத்தியது.

இதே போன்ற வழக்கில், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் மீது இந்திய அரசு வரி விதித்ததை எதிர்த்து அந்நிறுவனம் தொடுத்த வழக்கிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு தரப்பு தோல்வியை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

வோடபோனைத் தொடர்ந்து, கெய்ர்ன் வழக்கிலும் தோல்வி – அரசுக்கு ரூ 10,250 கோடி இழப்பு

இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்த வோடபோனுக்கு சாதகமாக, கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி தீர்ப்பு வந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். அதன்படி, இந்த வாரத்தில் இந்திய அரசு சிங்கப்பூரில் உள்ள மேல்முறையீட்டு நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

“வரி விதிப்பு நமது நாட்டின் இறையாண்மை தொடர்பானது. அதனை ஒரு முதலீட்டு ஒப்பந்தமோ, நடுவர் நீதிமன்றமோ கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது” என்று இந்திய தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்