Aran Sei

“இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் ” – ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து நீண்ட காலத்துக்கு இந்தியப் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கும் என்று ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய நிறுவனங்களின் மற்றும் வங்கிகளின் நிதிநிலைமை கொரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு முன்பே மோசமாக இருந்தது என்றும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பொருளாதார முடக்கம் இந்த நிலையை இன்னும் மோசமாக்கி வளர்ச்சியை பாதிக்கும் என்று நேற்று வெளியிடப்பட்ட அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரை தெரிவிக்கிறது.

2025 வரையில் இந்தியாவின் உற்பத்தி அளவுகள் கொரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு முந்தைய மட்டத்தை விட 12% குறைவாகவே இருக்கும் என்று அது கணித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் தெற்காசியா மற்றும் தென்-கிழக்காசிய பொருளாதாரப் பிரிவுக்கான தலைவர் பிரியங்கா கிஷோர் எழுதிய இந்த அறிக்கையின்படி அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 4.5% அளவு மட்டுமே இருக்கும், நோய்த்தொற்றுக்கு முன்பு அது 6.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இந்தியப் பொருளாதாரம் 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9% சுருங்கியது. ஆனால், இந்திய பொருளாதாரத்தின் இப்போதைய உற்பத்தியான $2.8 லட்சம் கோடியை 2025-ல் $5 லட்சம் கோடியாக உயர்த்துவது என்ற இலக்கை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

சென்ற வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் பொருளாதாரம் வளர்ச்சியடையப் போவதில்லை, மாறாக சுருங்கி விடும் என்று தெரிவிக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தரவுகள் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ளன.

இந்த நிதியாண்டு முழுவதையும் எடுத்துக் கொண்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 10.9% சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது (ஐஎம்எஃப்). எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்பு கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு 5% ஆக குறுகி விடும் என்று தெரிவித்திருக்கிறது. இது கொரோனா நோய்த்தொற்றுக்கு முந்தைய கட்டத்தில் 6% ஆகவும், 2008 உலக பொருளாதார நெருக்கடிக்கு முன்னதாக 7% ஆகவும் இருந்தது.

“கொரோனா நோய்த்தொற்று கால காட்டத்துக்கு முந்தைய நிலையிலேயே தொடரும் மனித உழைப்பைத் தவிர்த்த பிற வழங்கல் காரணிகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன.” என்று ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. “மூலதனத் திரட்டல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் “நிறுவனங்களின் நிதி நிலைமை நெருக்கடியைத் தொடர்ந்து இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும், “இதனால் முதலீடு பழைய நிலைமைக்கு மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும்” என்று அவ்வறிக்கை கருத்து தெரிவிக்கிறது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்  நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் 200 பொருளாதார நிபுணர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டு 400 ஊழியர்கள் பணி புரிகின்றனர் என்று அந்நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்