Aran Sei

இந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு

Image Credit : thehindu.com

பிறந்த குழந்தை முதல் 14 வயது வரையிலான 37.5 கோடி குழந்தைகள், இந்தியாவின் “பெருந்தொற்று தலைமுறையை” உருவாக்கவிருக்கின்றன என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குறைவான எடை, வளர்ச்சி குன்றுதல், அதிகரித்த குழந்தை இறப்பு வீதம் ஆகியவை தொடங்கி, கல்வி இழப்பு, உற்பத்தித் திறன் இழப்பு, ஆகிய அச்சுறுத்தல்களை இந்தத் தலைமுறை எதிர்கொள்கிறது என்று அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையத்தின், “சுற்றுச் சூழலின் நிலை பற்றிய அறிக்கை” தெரிவிக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, உலக அளவில் 50 கோடி குழந்தைகள் பள்ளியை விட்டு நிற்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பாதி இந்தியாவில் உள்ளனர் என்றும் கூறுவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“கொரோனா உலகத்தின் ஏழைகளை மேலும் ஏழ்மைக்குள் தள்ளியுள்ளது” என்று அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுனிதா நாராயண் கூறியுள்ளார்.

“பெருந்தொற்று காரணமாக 11.5 கோடி மக்கள் புதிதாக ஏழ்மைக்குள் தள்ளப்படலாம்” என்றும் “அவர்களில் பெரும்பாலானோர் தெற்கு ஆசிய நாடுகளில் (இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை முதலியன) வாழ்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழல் மாசு

2009-க்கும் 2018-க்கும் இடையே, இந்தியாவின் 88 முக்கியமான தொழில்துறை மையங்களில் காற்று, நீர், நிலம் மாசுபடுதல் அதிகரித்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது.

அவற்றில்

  • 35 ஒட்டு மொத்தமாக சுற்றுச்சூழல் சீரழிவையும்
  • 33 மோசமாகும் காற்று தரத்தையும்
  • 45-ல் நீர் மேலும் மாசுபட்டும்
  • 17-ல் நிலம் மாசுபடுதல் மோசமாகியிருப்பதாக

அது கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூர் மிகவும் மாசுபட்ட மையமாக உள்ளது.

2019-ல் காற்று மாசுபடுதல் காரணமாக 6.6 கோடி இந்தியர்கள் இறந்துள்ளனர். அதன் பொருளாதார சுமை $3600 கோடி (சுமார் ரூ 2.2 லட்சம் கோடி), அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.36 சதவீதம் ஆகும்.

மாசுபடுதலை கட்டுப்படுத்தி குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்று இது காட்டுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையம் கூறியுள்ளது. ஏற்கனவே, மிக மோசமாக, அல்லது தீவிரமாக பாதிக்கப்பட்டவை என்று அடையாளம் காணப்பட்ட இடங்களிலும் இந்த நிலைமை நிலவுவதாக அது கூறுகிறது.

நீடித்த வளர்ச்சி

நீடித்த வளர்ச்சிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 192 நாடுகளில் 117-வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கி உள்ளது.

கேரளா, இமாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் நீடித்த வளர்ச்சி தரவரிசைப்பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. பீகார், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, உத்தர பிரதேசம் ஆகியவை மோசமாக செயல்படுகின்றன.

2019-ல் 22 மாநிலங்களில் 11,000 ஹெக்டேர் (சுமார் 26,500 ஏக்கர்) காட்டு நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

19,614 ஹெக்டேர் காட்டு நிலங்களை பாதிக்கும், 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டும், 10,000-க்கும் அதிகமான குடும்பங்களை வெளியேற்றும் 8 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்