Aran Sei

மனிதவள குறியீடு: பின்தங்கும் இந்தியா

credit: indianexpress.com

னிதவள குறியீட்டில் இந்தியா 116-வது இடத்துக்கு பின்நோக்கி சென்றிருப்பதாக உலக வங்கியின் மனிதவள குறியீட்டு அறிக்கை (Human Capital Index) தெரிவிக்கிறது.

உலக வங்கி பல்வேறு நாடுகளின் மனிதவள குறியீட்டைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மனிதவள குறியீட்டு அறிக்கையை தயாரிக்கிறது.

இந்தாண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 174 நாடுகளின் மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகள், கொரோனா தொற்றுக்கு முன்பு வரை கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைப் பெருமளவில் மேம்படுத்தியிருக்கிறது என அறிக்கை குறிப்பிடுகிறது.

“மனித மூலதனத்தில் ஏற்பட்டு வந்த பல பத்தாண்டு கால முன்னேற்றங்கள் மீது கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மருத்துவம், குழந்தை உயிர்பிழைக்கும் விகிதம் மற்றும் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றின் மீது தாக்கம் செலுத்தியிருக்கிறது” என்று உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

”பெண்கள் மீதும் வசதி வாய்ப்புகளற்ற குடும்பங்களின் மீதும் கொரோனா ஆழமானப் பொருளாதார தாக்கத்தை விளைவித்திருக்கிறது” என்றும் கூறியுள்ளர்.

கொரோனா காரணமாக நூறு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர். அவர்களில் சராசரியாக சரிபாதிக்கும் அதிமானவர்கள் இந்த ஆண்டில் எஞ்சியிருக்கும் மாதங்களில் பள்ளிக்கு சென்று கற்க முடியாமல் போகலாம்.

அதேபோல், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அடிப்படையான மருத்துவ சேவைகள் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு கட்டாயமாக போட வேண்டிய தடுப்பூசிகள் போட முடியாமல் போகலாம் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டுக்கான மனித மூலதன அறிக்கையில் இந்தியா 116 இடத்துக்கு பின்நோக்கி சென்றுள்ளது. சென்ற ஆண்டில் இந்தியா 115-வது இடத்தில் இடத்தில் இருந்தது.

மனித மூலதன குறியீட்டின் மீது ”தீவிரமான மாற்று கருத்துக்கள்” இருப்பதாக சென்ற ஆண்டு இந்தியா உலக வங்கியிடம் தெரிவித்தது.

இந்தியா எழுப்பிய ஆட்சேபனைகளைக் குறித்து உலக வங்கியின் முதன்மை பொருளியலாளர் ராபர்டா கட்டியிடம் கேட்டதற்கு, குறியீட்டை மேம்பட்டதாக மாற்றுவதற்கும் தரவுகளை இன்னும் செழுமையாக்குவதற்கும் நாடுகளுடன் இணைந்து தனது குழு வேலை செய்வதாக கூறினார்.

குறியீடு பற்றி உரையாடுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். “நாங்கள் வாடிக்கையாளர் நாடுகளுடன் குறியீட்டில் உள்ள விவரங்கள் பற்றி விவாதித்திருக்கிறோம். ஆனால், அந்நாடுகள் முக்கியமாக கருதும் விவரங்கள் குறியீட்டில் இடம் பெறாது” என்பதை ராபர்டோ குறிப்பிட்டார்.

மனிதவளத்தை அளவீடு செய்யும் குறியீடாக இதை பயன்படுத்துவது குறித்து இந்தியாவுடன் நேரடியாகவே பேசியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது மனிதவளத்துக்கு வழங்க வேண்டிய முன்னுரிமைகள் குறித்து மனித மூலதன குறியீடு ஒரு அடித்தளத்தை வழங்கும் என்று உலக வங்கியில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் துணை தலைவர் மம்தா மாரூதி கருத்து தெரிவித்துள்ளர்.

இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கான வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதப்படுத்த இந்திய அதிகாரிகளுடன் உலக வங்கி இணைந்து வேலை செய்து வருவதாக அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்