Aran Sei

நீதிமன்ற செலவுக்காக நகைகளை அடமானம் வைத்தாராம் அம்பானி

Image Credits: Wikipedia

தொழிலதிபர் அனில் அம்பானி தான் ஒரு எளிய சுவை கொண்ட, எளிய மனிதர் என்று கூறியுள்ளார். அவர் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நீதி மன்றத்தில் “என்னிடம் விலைமதிப்புள்ள எதுவும் இல்லை” என்றும், அவரது பகட்டான வாழ்க்கை முறை குறித்து மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் யாவும் “ஊடகக் கட்டு கதைகள் என்றும்” கூறியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் சீனாவின் மூன்று வங்கிகளிடம் 700 மில்லியன் டாலர் கடன் பெற்றிருந்தார். இக்கடனை அவர் செலுத்தத் தவறியதால் கடன் வழங்கிய இண்டஸ்ட்ரியல் & கமர்ஷியல் பேங்க் ஆஃப் சீனா, சீனா டெவலெப்மெண்ட் பேங்க் மற்றும் எக்ஸிம் பேங்க் ஆஃப் சீனா ஆகிய மூன்று வங்கிகளும் அவர் மீது வழக்கு தொடர்ந்தன.

இவ்வழக்கில் சாட்சியளித்த அனில் அம்பானி நீதிமன்ற கட்டணங்களைச் செலுத்த நகைகள் அனைத்தையும் விற்றதாகக் கூறியுள்ளார்.

மே 22 அன்று, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், நீதிபதி நீகல் தீர்ப்பு வழங்கினார். அதில், அனில் அம்பானி அளித்த உத்தரவாதத்தின்படி, அவர் கடனை வட்டியோடு செலுத்தியே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார்.

இக்கடனைச் செலுத்த அவருக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அவர் வட்டியோடு சேர்த்து 717 மில்லியன் டாலரைச் செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.5,446 கோடியாகும். இந்த முடிவால் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்று அனில் அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை.

நேற்று நடந்த வழக்கு விசாரணையில் காணொலி மூலம் அனில் அம்பானி ஆஜர் ஆனார். அப்போது பேசிய அவர் தனது வங்கி இருப்பு 2019-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரூ. 40.2 லட்சத்திலிருந்து, 2020-ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ரூ.20.8 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். ஒரே இரவில் இந்தச் சரிவு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

விசாரணையின் போது, ​​லண்டன், கலிஃபோர்னியா, பெய்ஜிங் மற்றும் பிற இடங்களில் பொருட்கள் பெற்றதாக காட்டும் கிரெடிட் கார்டு ரசீதுகள் குறித்தும் அம்பானியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை தனது தாய் வாங்கியது என்று அவர் பதிலளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்