Aran Sei

” ஜிஎஸ்டி பகிர்ந்து அளிக்கப்படும் ” – நிர்மலா சீதாராமன் உறுதி

credit: indianexpress.com

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை தொடர்பாகக் கருத்தொற்றுமை எட்டப்படாமல் நேற்று நடைபெற்ற 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்துள்ளது.

தற்போது நிதி அமைச்சகத்துக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான பிணக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொடங்கியது. அக்கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைக் கடனாக மாநிலங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதைப் பெறுவதற்கான வழிவகைகளை நிதி அமைச்சகம் எடுக்கும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு ஜூன் 2022-ம் ஆண்டு வரை மாநில அரசுகளுக்கு வழங்கும் என்று ஜிஎஸ்டி வரிமுறை கொண்டுவரப்பட்ட நேரத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்களுக்கு இரண்டு வகையான கடன் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஒன்று, நடப்பு ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு கூடுதல் வரி (GST Compensation CESS) வசூலில் ரூ. 97,000 கோடி பற்றாக்குறை ஏற்படும். மாநிலங்கள் அந்தத் தொகையைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது, நடப்பு ஆண்டில் ஜிஎஸ்டி பற்றாக்குறை மொத்தமாக ரூ 2.35 லட்சம் கோடியாக இருக்கும். மாநிலங்கள் மொத்தமாக ரூ 2.35 லட்சம் கோடி கடன் பெற்றுக்கொள்ளலாம் என இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இந்த இரு வாய்ப்புகளுக்கும் கேரளா, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான நிதி அமைச்சகத்தின் நிலைப்பாட்டில் பிரதமர் தலையிட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

நிதி அமைச்சகத்தின் இந்த இரு வாய்ப்புகளுக்கும் 20 மாநிலங்கள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால், கேரளா உட்பட 10 மாநிலங்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-வது கூட்டம் நடைபெற்றது.

நேற்றைய கூட்டத்தில் “ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைக் கடனாகப் பெறுவது தொடர்பாகக் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. அதேபோல், ஜிஎஸ்டி இழப்பீட்டுக் கூடுதல் வரி ஜூன் 2022 வரைதான் விதிக்க முடியும். அதை ஜூன் 2022-க்கு அப்பாலும் நீட்டிக்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் “மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைக் கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு 21 மாநிலங்கள் இசைவு தெரிவித்துள்ளன. இதை 10 மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. நடப்பு ஆண்டில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்று 10 மாநிலங்களும் கோருகின்றன.” என்று கூறினார்.

மத்திய அரசு நிதி மீது அமர்ந்துகொண்டு மாநிலங்களுக்கு வழங்காதது போல் எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் கருதுவதாகக் கூறும் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகம் இழப்பீட்டுத் தொகையை மறுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனோ “ஜிஎஸ்டி இழப்பீட்டுக் கூடுதல் வரி மூலமாக ரூ 20,000 கோடி இதுவரையில் வசூலாகியுள்ளது. அத்தொகை உடனடியாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்” என உறுதியளித்தார்.

“இந்த நிதி மத்திய அரசு எங்களுக்கு (மாநிலங்களுக்கு) வழங்க வேண்டிய தொகையே அன்றி நிவாரணம் கிடையாது. மாநிலங்களுக்குக் கடந்த 6 ஆறு மாத காலமாக மத்திய அரசு எந்தத் தொகையும் வழங்கவில்லை” என பஞ்சாப் முதல்வர் பாதல் சிங் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

நேற்று நடந்த கூட்டத்தில் நிதி அமைச்சகத்துக்கும் மாநில அரசுகளுக்கு இடையில் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்