Aran Sei

ஜிஎஸ்டி இழப்பீடு : பணிந்தார் நிர்மலா – மத்திய அரசே கடன் வாங்கும் என அறிவிப்பு

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசே கடன்பெற்று வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 13-ம் தேதி கூடிய ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களே கடனாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு அவசரமாகத் தேவைப்படும் நிதியை கடனாக பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கும் மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம் உதவி செய்யும் என்று கூறிய நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சிகள் ஆளும் 10 மாநிலங்கள், மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதை முட்டுக்கட்டை என்றோ பிரச்சனை என்றோ கருத முடியாது என்று கூறினார்.

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட மத்திய அரசு கடன் வாங்கினால், அது ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று கூறிய சீதாராமன், ஆகவே, மாநில அரசுகள் கடன்பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு 21 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

நிதி அமைச்சரின் இந்த கருத்திற்கு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 21 மாநிலங்கள் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்போவதாக நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது சட்டவிரோதம் என்று கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கேரளா உட்பட சில மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்தும் ஆலோசித்து வந்தன.

இந்நிலையில், மத்திய அரசு திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

அதன்படி, மத்திய அரசே கடன் பெற்று அதை மாநில அரசுகளுக்கு தொடர் கடனாக வழங்கவுள்ளதாக நிதி அமைச்சகம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், மாநிலங்கள் கடன் பெறுவதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிவந்த நிதி அமைச்சகம், தற்போது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “இதன் மூலம் மாநிலங்கள் மாறுபட்ட, அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய அவசியம் இருக்காது” என்று தெரிவித்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர், மத்திய அரசு கடன்பெறுவதால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறிய நிதி அமைச்சகம், தற்போது வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மத்திய அரசு கடன்பெறுவதால் நிதி பற்றாக்குறையில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவினால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை யார் கடனாக பெறுவது என்பது தொடர்பாக நீடித்து வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்