Aran Sei

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை: தூக்கி வீசப்படும் கூட்டாட்சி தத்துவம்

credit: theweek.in

ரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக கடன் வாங்க 22 மாநிலங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சின் 41-வது கூட்டம் சென்ற மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடப்பு ஆண்டில் (2020-21) ஜிஎஸ்டி பற்றாகுறை ரூ 2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க அறிமுகம் செய்யப்பட்ட இழப்பீடு கூடுதல் வரி-யில் ரூ 97,000 கோடி பற்றாகுறை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்தியப் பொருளாதாரத்தின் மீது கொரோனா தொற்று உண்டாக்கிய தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட மத்திய அரசு இரு வாய்ப்புகளை வழங்கியது. அதன்படி, ஜிஎஸ்டி இழப்பீட்டு கூடுதல் வரியில் ஏற்பட்டிருக்கும் ரூ 97,000 கோடியை ரிசர்வ் வங்கியின் சிறப்பு கடன் பெறும் வசதி மூலமாக மாநிலங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மற்றொரு வாய்ப்பு, ஜிஎஸ்டி-ன் மொத்த பற்றாக் குறையான ரூ 2.35 லட்சம் கோடியை, ரிசர்வ் வங்கியிடமிருந்து மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

முதல் வாய்ப்பை மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், மாநிலங்கள் கடன் வாங்கியுள்ள தொகைகளை ஜிஎஸ்டி இழப்பீட்டு கூடுதல் வரியின் காலத்தை 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு மேல் விரிவாக்கி அதிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் மூலமாக மத்திய அரசு ஈடு செய்யும்.

மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம் வழங்கியுள்ள இரண்டாவது வாய்ப்பான, மொத்த பற்றாக்குறையையும் கடன் வாங்கும் பட்சத்தில், மாநிலங்கள் வாங்கும் கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டும்.

இந்த இரு வழிகளையும் கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் எதிர்த்தன. தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நிதி அமைச்சகம் வழங்கியுள்ள முதல் வாய்ப்பை 21 மாநிலங்கள் தேர்ந்தெடுத்துள்ளன. மிசோரம் மாநிலம் மட்டும் மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையையும் கடன் வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ளும் தீர்மானம் நிறைவேறுவதற்கு 20 மாநிலங்கள் ஆதரவாக வாக்களித்தால் போதுமானது. மத்திய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வாக்கு ஜி.எஸ்.டி கவுன்சிலில் உள்ளது.

இதுவரையில், ஜிஎஸ்டி கவுன்சிலில் லாட்டரி சீட்டுகள் மீதான வரி பற்றி ஒருமுறை மட்டுமே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைத்தவிர, இதுவரை கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த முறை மாநில அரசுகளின் நிதி கடுமையாக மோசமடைந்துள்ள நிலையில், நிதி அமைச்சகத்தின் முடிவை மாநில அரசுகள் எதிர்த்த காரணத்தினால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

மத்திய அரசு திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்க்கொள்ளும். எனவே, “தற்போது நிலவும் சூழலை மனதில் கொண்டு பார்க்கும்போது, இதுவரையில் நிதி அமைச்சகத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அக்டோபர் 5-ம் தேதி கூட இருக்கின்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில், அந்த மாநிலங்கள் இழப்பீட்டு தொகையை பெற ஜூன் 2022-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி தெரிவித்திருப்பதாக மிண்ட் நாளேடு குறிப்பிடுகிறது.

சென்ற வாரம் செய்தியாளர் சந்திப்பின் போது, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், “ஜி.எஸ்.டி வரி வருவாயில் பற்றாகுறை ஏற்படும் போது மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது இந்திய அரசமைப்பு சட்டத்தின்படியான ஏற்பாடு. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வேண்டுமென்றே அரசமைப்பு சட்டத்தில் உள்ள கூட்டாட்சி அம்சத்தை புறக்கணிக்கிறது” என்று கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்