Aran Sei

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்?

credit:cnbctv18.com

ரக்கு மற்றும் சேவை வரி  (ஜிஎஸ்டி) மூலம் செப்டம்பர் மாதம் ரூ.95,480 கோடி வசூலாகியுள்ளது என்று நேற்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் வசூலாகியுள்ள தொகையில், மத்திய அரசு ரூ.17,741 கோடியும் மாநில அரசுகள் ரூ.23,131 கோடியும் ஈட்டியுள்ளன. இதைத் தவிர, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யின் (IGST) கீழ் ரூ. 47,484 கோடி வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி கூடுதல் வரி (Cess) ரூ.7,124 கோடி வசூலாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய அரசுக்கு ரூ.21,260 கோடிகளும் மாநில அரசுகளுக்கு ரூ.16,997 கோடிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2019-ம் ஆண்டில் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாயை விட நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 4 விழுக்காடு அதிகம் வசூலாகியுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், இந்த ஆண்டில் மொத்தம் ரூ. 6.90 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி மூலம் வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதன் அறிகுறி என்று தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.

அது பற்றி அரண்செய் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் ஜோதி சிவஞானத்துடன் பேசிய போது, “இந்த ஒரு தரவை வைத்து பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது என்று சொல்ல முடியாது. நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணக்கு வெளிவரவிருக்கிறது. அதில்தான், நாட்டுப் பொருளாதாரம் மீட்சியடைந்துள்ளதா இல்லையா? என்பது தெரியவரும்” என்று அவர் கூறினார்.

“இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி வருவாய் ரூ 6.90 லட்சம் கோடி வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. பொது முடக்கம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது இந்த இலக்கு எட்டப்படுமா?” என்று கேட்ட போது, “அடைவதற்கான சாத்தியங்கள் குறைவு” என்று ஜோதி சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு பொருளாதாரம் குறித்து பேசும் போது, “ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தில் சேவைத் துறை ஆதிக்கம் செலுத்துவதை போலவே தமிழ்நாட்டு பொருளாதாரத்திலும் சேவைத் துறைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்களிப்பு ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தை விடவும் கூடுதலாகும்” என்று அவர் கூறினார்.

“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 15 விழுக்காடு ஆகும். ஆனால், தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு சுமார் 7 விழுக்காடு மட்டுமே ஆகும். இதன் பொருள் என்னவென்றால், இந்தியப் பொருளாதாரம் கீழ்நோக்கி விழுந்தது என்றால் தமிழ்நாட்டு பொருளாதாரம் அதைவிட அதிகமாக கீழே விழும். இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும் போது தமிழ்நாடு பொருளாதாரம் அதை விட வேகமாக வளரும்” என்றும் பேராசிரியர் ஜோதி சிவஞானம் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்