Aran Sei

ஜிஎஸ்டி இழப்பீடு – மத்திய அரசால் கடன் வாங்க கட்டாயப்படுத்தப்படும் மாநிலங்கள்

த்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை, மாநிலங்கள் கடனாக பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் ஒத்த முடிவு எட்டப்படவில்லை.

இருந்தபோதும், கடன் பெற்றுக்கொள்ள விரும்பும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

“கருத்து வேறுபாடு இருந்ததால் ஒத்த முடிவு எட்டப்படவில்லை. இழப்பீடு தொகை மற்றும் அதை நீட்டிப்பது குறித்து நிச்சயமாக ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க முடியும். அது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாநிலங்கள் கடன் வாங்குவதா அல்லது மத்திய அரசு வாங்குவதா என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க முடியுமா என்பது குறித்து அவர்களுக்குள்ளேயே (மாநிலங்களுக்குள்) கேள்வி உள்ளது” என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் ஆளும் 10 மாநிலங்கள் வலியுறுத்துவதை முட்டுக்கட்டை என்றோ பிரச்சனை என்றோ கருத முடியாது என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு அவசரமாகத் தேவைப்படும் நிதியை கடனாக பெற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கும் மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம் உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.

இந்த முடிவை 21 மாநிலங்கள் ஆதரித்துள்ளதாக மத்திய அரசு கூறுகின்றது.

ஆனால், இதை எதிர்க்கும் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு “கடன் பெற எங்கள் உதவி தேவைப்படும் மாநிலங்களுடன் நாங்கள் திறந்த மனதுடன் பேசத் தயார். நாளை காலையே அவர்கள் வந்தாலும் நாங்கள் உதவி செய்யத் தயார்” என்று நிதி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

21 மாநிலங்கள் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்போவதாக நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது சட்டவிரோதம் என்று கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். “இழப்பீடு வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒத்திபோடுவதற்கு மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்தின்படி, கவுன்சிலின் அனுமதி தேவை. அப்படிப்பட்ட ஒரு முடிவு கவுன்சிலில் எடுக்கப்படவில்லை” என்று அவர் தனத டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“பெருந்தொற்றை எதிர்கொள்ள, நிதி உடனடியாக தேவைப்படும் மாநிலங்களுக்கு நான் என்ன பதில் சொல்வது என்று கவுன்சில் உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியதாக” கூறியுள்ள சீதாராமன், மாநிலங்கள் செய்ய விரும்பியதை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். “பல மாநிலங்கள் (ஜிஎஸ்டி) கவுன்சிலை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுடன் ஒப்பிடுகின்றன. ஆனால், ஒரு உறுப்பினர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முடிவை மாற்ற முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட மத்திய அரசு கடன் வாங்கினால், அது ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். தனியார் துறையையும் பாதிக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கடன் வாங்குவதற்கான நெறிமுறைகளை ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம். அதை தற்போது விரிவுபடுத்தினால், அரசு பத்திரங்களின் பயனளிப்பு அதிகரித்து, கடன்பெறும் மதிப்பும் அதிகரிக்கும். இந்தியா, நிறைய கடன்பெற்று, முதலீடு செய்ய எதிர்நோக்கியுள்ள இந்த சமயத்தில் இதற்கு இடமளிக்க முடியுமா? மாநிலங்கள் கடன் வாங்கினால், இவ்வளவு பிரச்சனை இருக்காது” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

காணொலி மூலம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பாக கலந்துகொண்ட மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் ஜெயகுமார், கூட்டத்தில் பேசும் போது, 27.08.202 அன்று நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசுதான் கடன்பெற்று மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.

“கொரோனா பெருந்தொற்று நிலவி வரும் இந்த தருணத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனம் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளஅமைச்சர் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் இதற்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசுகள் கடன்பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் ஜூலை 2020 வரை தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் ரூ.10,775 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் ஜெயகுமார் 2017-18 ஆண்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.4,321 கோடி விரைந்து வழங்கப்படும் என்று உறுதியளித்த மன்ற தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்