Aran Sei

பெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்

பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் லிட்டருக்கு ரூ 8.5 வரை மத்திய அரசு குறைக்க முடியும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் ஒரு ஆய்வுக் குறிப்பில் கூறியுள்ளது. அரசின் வருவாய் இலக்குக்கு பாதிப்பு இல்லாமலேயே இதைச் செய்ய முடியம் என்று பகுப்பாய்வு செய்தவர்கள் தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை – காரணம் என்ன?

சென்ற ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 13 அளவிலும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 16 அளவிலும் உயர்த்தப்பட்டது என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

ஜூலை 2018-ல் பீப்பாய்க்கு சுமார் $70 ஆக இருந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மார்ச் 2020-ல் $20 அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இவ்வாறு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்ததை ஒட்டி, அந்த ஆதாயத்தை வரி விதிப்பின் மூலம் அரசு எடுத்துக் கொண்டது.

அதன் பிறகு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து இப்போது பீப்பாய்க்கு சுமார் $60 மட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும், மத்திய அரசு கூடுதலாக விதித்த வரி விதிப்பை திரும்பப் பெறாததால், இப்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 32.9 ஆகவும், டீசல் மீது ரூ 31.8 ஆகவும் உள்ளது.

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூ.100 – தினமும் உயர்ந்து வரும் விலை

இதனால் பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. கலால் வரியை குறைத்து மக்கள் மீதான சுமையை தணிக்குமாறு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கோரி வருகின்றனர்.

“வரி குறைக்கப்படா விட்டால் இந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் அரசுக்கு ரூ 4.35 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இது நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்ட ரூ 3.2 லட்சம் கோடியை விட அதிகம். எனவே, லிட்டருக்கு ரூ 8 வீதம் வரியை குறைத்தாலும் அரசு தான் இலக்கு வைத்த வருவாயை பெற்று விட முடியும்” என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்