மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை 0.4% முதல் 1.1% வரை குறைத்த அரசு ஆணை கவனக் குறைவால் வெளியிடப்பட்டு விட்டது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்துள்ளார்.
Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021.
Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia @PIB_India— Nirmala Sitharaman (@nsitharaman) April 1, 2021
“இந்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதம் மார்ச் 2021-ல் இருந்த அதே அளவில் தொடரும்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறை நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இன்று முதல் ஜூன் 30 வரையிலான, 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதங்கள் 0.4%-லிருந்து 1.1% வரையில் வெட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்ட அத்துறையின் துணை இயக்குனர் ராஜேஷ் பன்வார் அதற்கு பொருத்தமானவர்களின் ஒப்புதல் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சுற்றறிக்கை வெளியாகி சில மணி நேரங்களுக்குள் நிதி அமைச்சர் அந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளது குறித்து பலத்த கேலிகளும், வட்டி வீதம் குறைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
“வெளியிடப்பட்ட ஆணை அமைச்சகத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் அனைத்து நடைமுறைகளையும் கடந்து வந்திருக்க வேண்டும். எனவே, நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒரு ஏப்ரல் முட்டாள் அறிவிப்பாக இருக்கலாம்” என்று சதீஸ் சந்தக் என்ற கணக்கியலாளர் ட்வீட் செய்துள்ளார்.
This message may be April Fool message as the order passed must have all formalities completed by the Ministry and Bureaucracy.
If it is oversight then FM needs to resign immediately as such oversight cannot be tolerated
There may be effect on voting in 5 states, so withdrawn!
— CA Satish Chandak (@Simplysrchandak) April 1, 2021
“இது கவனக்குறைவு என்றால் நிதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும், ஏனென்றால் இத்தகைய கவனக் குறைவை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும், “இந்த சுற்றறிக்கை 5 மாநில தேர்தல் வாக்களிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வீதங்களை அறிவிக்கும் மத்திய அரசின் முறை 2016-ல் தொடங்கிய பிறகு, வெளியிடப்பட்ட வட்டி வீதங்களை ரத்து செய்தது இதுதான் முதல்முறை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது.
முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம், சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி வீதத்தை குறைக்கும் அறிவிப்பில் எந்த “கவனக் குறைவும்” இல்லை என்று கூறியுள்ளார்.
“சிறு சேமிப்புத் திட்டங்களில் அடுத்த காலாண்டுக்கான வட்டி வீதத்தை அறிவிப்பது ஒரு வழக்கமான நடைமுறை. மார்ச் 31 அன்று அது வெளியிடப்பட்டதில் எந்த ‘கவனக் குறைவும்’ இல்லை. பாஜக அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தின் மீது இன்னும் ஒரு தாக்குதலை நடத்த முடிவு செய்து விட்டது. வட்டி வீதங்களை குறைத்து, தான் லாபமடைய முடிவு செய்துள்ளது” என்று ப சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
“பிடிபட்டபிறகு, ‘கவனக் குறைவான’ தவறு என்ற சாக்கை நிதி அமைச்சர் கூறுகிறார். பண வீக்கம் 6%-க்கு மேல் இருக்கும் போது, பாஜக அரசாங்கம் 6%-க்கும் குறைவான வட்டி வீதத்தை அளித்து நடுத்தர வர்க்கத்தை வயிற்றில் அடிக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா, வட்டி வீதக் குறைப்பை நிறுத்தி வைத்தது, “தேர்தலால் தூண்டப்பட்ட” நடவடிக்கை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.