Aran Sei

ஏலத்திற்கு வரும் ஏர் இந்தியா – விற்பனைக்கு வரும் பொதுத்துறை நிறுவனங்கள்

ஏர் இந்தியா

ர் இந்தியாவை வாங்க முன் வருபவர்களுக்கு அதன் கடன் தொடர்பாகச் சலுகைகளை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று “முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை” துறைக்கான செயலர் துஹின் கந்தா பாண்டே கூறியிருக்கிறார் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் பொதுச் சொத்துகளை விற்பதன் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை திட்டமிட்டிருந்தது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைமூலம் ரூ.1.2 லட்சம் கோடியும் பொதுத்துறை வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.90,000 கோடியும் திரட்டுவதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிதியாண்டில் இதுவரையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கை விற்பதன் மூலம் ரூ.5,695 கோடி திரட்டப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் அதிகாரபூர்வ விமான சேவை நிறுவனமாகும். இது அரசு நிறுவனமான ஏர் இந்தியா லிமிடெட்டுக்குச் சொந்தமானது. இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவை ஒப்பந்தங்களில் நாட்டின் அதிகாரபூர்வ விமான சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது சர்வதேச வழக்கம்.

ஏர் இந்தியா 102 உள்நாட்டு, வெளிநாட்டு நகரங்களுக்கு இடையே தனது விமான சேவையை இயக்கி வருகிறது.

ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பதாக இந்திய அரசு 2017-ம் ஆண்டு முடிவெடுத்தது. ஏர் இந்தியாவின் 76% பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற குறைந்த கட்டண சேவை நிறுவனம், AISATS என்ற விமான நிலைய சேவை நிறுவனம் ஆகியவற்றை விற்பதற்கான அறிவிப்பை அரசு 2018-ம் ஆண்டு வெளியிட்டது. இந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் முதலீட்டாளர் ரூ.33,392 கோடி கடன்களுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை வாங்குவதற்கு எந்தத் தனியார் முதலீட்டாளரும் முன் வரவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஏர் இந்தியாவின் 100% பங்குகளை விற்பதற்கான அறிவிப்பை இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்குள் ஏர் இந்தியாவின் கடன்களைச் சிறப்பு ஏற்பாடுகள்மூலம் ரூ.30,000 கோடி அளவிற்கு அரசு குறைத்துவிட்டிருந்தது என்று moneycontrol இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனவே, இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முதலீட்டாளர் ரூ.23,286.5 கோடி கடனை மட்டும் ஏற்றுக்கொண்டால் போதும் என்று அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

“கொரோனாவினால் விமானப் போக்குவரத்துத் துறையி்ல ஏற்பட்டுள்ள நிச்சயமின்மை காரணமாகக் கடன் அளவுபற்றி ஆரம்ப கட்டத்தில் நிர்ணயிக்கக் கூடாது” என்று முதலீடு செய்ய விரும்புபவர்கள் தெரிவித்திருக்கின்றனர் என்கிறது தி இந்து செய்தி.

இதை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, ஆரம்ப கட்டத்திலேயே கடன் தொகையை முடிவு செய்யாமல், சந்தைமூலம் அதைப் பிந்தைய கட்டத்தில் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று சலுகை வழங்கியிருப்பதாகத் துறைச் செயலர் பாண்டே கூறியிருக்கிறார்.

ஏர் இந்தியாவுக்கான ஏலம் பங்கு மதிப்பின் அடிப்படையில் நடைபெற வேண்டுமா அல்லது நிறுவனத்தின் மதிப்பு அடிப்படையில் நடைபெற வேண்டுமா என்பதும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று பாண்டே கூறியிருக்கிறார்.

ஏர் இந்தியாவுக்கான விலைக் குறிப்புகளைக் கொடுப்பதற்கான கடைசி நாளான அக்டோபர் 30, டிசம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என்று தி இந்து செய்தி கூறுகிறது.

பிற பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைகளைப் பொறுத்தவரை, ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா, சென்ட்ரல் மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் விற்பனையின் இரண்டாம் கட்டத்தை எட்டி விட்டன என்று துறைச் செயலர் கூறியிருக்கிறார். இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்குப் புதிய அறிவிப்பு வெளியாகும். ரயில்வே நிலப் பயன்பாடுபற்றிய கொள்கையை முடிவு செய்தபிறகு கன்டெய்னர் கழகத்தை விற்பதற்கான அறிவிப்பை வெளியிட முடியும் என்று பாண்டே கூறியிருக்கிறார்.

BEML (பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்) தொடர்பான நிலப் பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதால் அதை விற்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட்டு விடலாம் என்றும் நிலாச்சல் இஸ்பாட் நிகம், பவன் ஹன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கான விற்பனை அறிவிப்புகளும் வெளிவர உள்ளன என்றும் துறைச் செயலர் பாண்டே கூறியுள்ளார்.

ஐஆர்எப்சி (IRFC), ரெயில்டெல், டிசிஐஎல், வேப்கோஸ் (WAPCOS) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் முதல் பங்கு வெளியீடு இந்த நிதியாண்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் துறைச் செயலர் பாண்டே கூறியிருக்கிறார்.

ஐஆர்எப்சி என்பது இந்திய ரயில்வே நிதி நிறுவனமாகும். 2020-ல் அதன் நிகர லாபம் ரூ.3,658 கோடி, விற்பனை வருவாய் ரூ.13,823 கோடி ஆகும். அதன் நிதி சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் கோடி.

ரெயில்டெல் என்பது இந்திய ரயில்வேயின் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கும் பிராட்பேண்ட் இணைய சேவை வழங்குவதற்குமான மினி ரத்னா நிறுவனம் ஆகும். 2019-ம் ஆண்டு அதன் விற்பனை வருவாய் ரூ.1,038 கோடி, நிகர லாபம் ரூ.112 கோடி ஆகும்.

டிசிஐஎல் என்பது தகவல் தொழில்நுட்பப் பொறியியல் துறை ஆலோசனை மினி ரத்னா நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 80 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 2010-11 நிதியாண்டில் அதன் விற்பனை வருவாய் ரூ.1833 கோடி.

வேப்கோஸ் என்பது நீர்வளம், எரிசக்தி, உள்கட்டமைப்புத் துறைகளில் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் மினி ரத்னா நிறுவனம் ஆகும். 2015-ம் ஆண்டு இதன் விற்பனை ரூ.928 கோடி, லாபம் ரூ 72.9 கோடி, இதன் சொத்துகளின் மதிப்பு ரூ.1002 கோடி.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்