ரிலையன்சுக்கு தன் பங்குகளை விற்பதற்கு ஃபியூச்சர் சில்லறை விற்பனை நிறுவனத்துக்கு தடை விதித்திருந்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
ஃபியூச்சர் குழுமம், தனது சில்லறை வணிக நிறுவனங்களை ரிலையன்ஸ்க்கு விற்றிருப்பதற்கு, உலகின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான், கடந்த அக்டோபர் மாதம், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நடுவர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றது. மேலும், அந்தத் தடையை அமல்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
பிப்ரவரி 2-ம் தேதி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜே ஆர் மிர்தா, ஃபியூச்சர் ரிடெய்ல் தனது சொத்துக்களை ரிலையன்சுக்கு மாற்றுவதில், இருக்கிற நிலைமை தொடர்வதை உறுதி செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.
ரிலையன்ஸ் ஃபியூச்சர் ஒப்பந்தம் – அமேசானுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு
இதைத் தொடர்ந்த் ஃபியூச்சர் ரிடெய்ல் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி என் பட்டேல், நீதிபதி ஜ்யோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ஜே ஆர் மிர்தாவின் பிப்ரவரி 2-ம் தேதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததாக, ஃபியூச்சர் ரிடெய்ல் பங்குச் சந்தைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக டெக்கான் ஹெரால்ட் செய்தி தெரிவிக்கிறது.
“அமேசானுக்கும் ஃபியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்துக்கும் ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில், ஃபியூச்சர் ரிடெய்ல் பங்கேற்கவில்லை. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அமேசான் சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே….”
“அரசின் சட்ட அமைப்புகள் சட்டப்படி செயல்படுவதை ஒரு தனியார் வழக்கின் அடிப்படையில் தடுக்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியதாக ஃபியூச்சர் ரிடெய்லின் பதிவு தெரிவிக்கிறது.
இந்த உத்தரவை நீதிபதிகள் திங்கள் கிழமை அன்று, திறந்த நீதிமன்றத்தில் பிறப்பித்ததாகவும், எழுத்து வடிவிலான நகலை எதிர்பார்ப்பதாகவும் அது கூறியுள்ளது.
ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனத்தின் பங்குகளை ரிலையன்சுக்கு விற்பதற்கான திட்டத்துக்கு ஏற்கனவே இந்திய போட்டி ஆணையத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று டெக்கான் ஹெரால்ட் செய்தி தெரிவிக்கிறது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பும், பங்குச் சந்தைகளும் இதற்கு எதிர்ப்பு இல்லை என தெரிவித்து விட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு ஜனவரி 26-ம் தேதி கொண்டு செல்லப்பட்டது.
ரிலையன்சுக்கும் அமேசானுக்கும் சண்டை – வேடிக்கை பார்க்க மட்டும் நாம் – ஷியாம் சுந்தர்
ரிலையன்சுக்கும் ஃபியூச்சர் ரிடெய்ல் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை முடக்குவதற்கான அமேசானின் முயற்சிக்கு இது ஒரு பின்னடைவு என்று என்டிடிவி கருத்து தெரிவித்துள்ளது. அமேசான் இந்தியா இது தொடர்பாக கருத்து கேட்டதற்கு பதிலளிக்கவில்லை என்று என்டிடிவி தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு பற்றி கருத்து கூற ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் மறுத்து விட்டிருக்கிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.