Aran Sei

பிக் பஜார் – ரிலையன்ஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அமேசான்

பிக் பஜார் முதலான சில்லறை விற்பனை நிலையங்களின் உரிமையாளரான ஃபியூச்சர் குழுமம், தனது வணிக நிறுவனங்களை ரிலையன்ஸ்க்கு விற்றிருப்பதற்கு, உலகின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் இடைக்காலத் தடை பெற்றிருக்கிறது என்று என்டிடிவி செய்தி  வெளியிட்டுள்ளது.

ஃபியூச்சர் தனது சில்லறை விற்பனை வணிகத்தை ரூ.24,713 கோடிக்கு முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு விற்பதற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நடுவர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2019-ம் ஆண்டு அமேசான், ஃபியூச்சர் குழுமத்தைச் சேர்ந்த ஃபியூச்சர் கூப்பன்ஸ் என்ற நிறுவனத்தில் 49% பங்குகளை வாங்கியது. அந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த மூன்று முதல் 10 ஆண்டுகளுக்குள் அக்குழுமத்தின் சில்லறை விற்பனை நிறுவனத்தில் பங்குகள் வாங்குவதற்கான உரிமையை அமேசான் பெற்றிருந்தது. ஃபியூச்சர் சில்லறை விற்பனை நிறுவனத்தில், ஃபியூச்சர் கூப்பன்ஸ் 7.3% பங்குகளை வைத்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கு மூலமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கடன் வெள்ளத்தில் மூழ்கிய ஃபியூச்சர் குழுமம் தனது சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் ஆகிய நிறுவனங்களை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்க்கு விற்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது என்கிறது தி இந்து செய்தி.

ஃபியூச்சர் நிறுவனத்தின் சில்லறை விற்பனை வணிகத்தை வாங்குவதற்கான தனது உரிமையை, ரிலையன்ஸுடனான அதன் வணிக ஒப்பந்தம் மீறுகிறது என்று அமேசான் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு சொல்வது வரை ரிலையன்ஸ் ஃபியூச்சர் சில்லறை விற்பனை வணிகத்தை வாங்குவது தடைபட்டிருக்கிறது.

ஆனால், இந்தத் தீர்ப்பை இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் உறுதி செய்தால்தான் அது இங்கு அமலுக்கு வரும் என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

ரிலையன்ஸ் 7,000 நகரங்களில் 12,000 கடைகளை நடத்துவதாகவும், 2019-20 நிதியாண்டில் அதன் சில்லறை விற்பனை மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடி என்றும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய சில்லறை விற்பனை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.37,710 கோடியைத் திரட்டியுள்ள ரிலையன்ஸ், சந்தையில் அதன் போட்டியாளர்களான வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட் அமேசான் இருவரையும் எதிர்த்துத் தாக்கத் திட்டமிட்டிருக்கிறது என்கிறது தி ஹிந்து நாளிதழ்.

இந்நிலையில் அமேசான் ரிலையன்ஸுக்கு எதிராகப் பெற்றிருக்கும் இந்த உத்தரவு ரிலையன்ஸுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸின் சில்லறை விற்பனை நிறுவனம், “ஃபியூச்சர் குழுமத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை எந்தத் தாமதமும் இன்றி நிறைவேற்றப் போவதாக” அறிவித்திருக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்