Aran Sei

விவசாயத்தில் சுதந்திர சந்தை – அமெரிக்க அனுபவம் சொல்வது என்ன?

Image Credit : Outlook India

வேளாண் உற்பத்திப் பொருட்களின் திறந்த வெளிச் சந்தை’ எவ்வாறு உள்ளது என்பதை எந்த நாட்டுடன் வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பார்ப்போம். முதலில் திறந்த வெளிச் சந்தையின் (free market) முன்னணி நாடான அமெரிக்காவைப் பார்ப்போம்.

அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் நிக்சன், “உணவு விலையை கட்டுப்படுத்த வேண்டும்” என்ற வழிகாட்டலுடன் ஏர்ல் பட்ஸை வேளாண் துறை அமைச்சராக நியமித்ததிலிருந்து நமது கதையை துவங்கலாம்.

இதற்குள் கிராமப்புற அமெரிக்காவில் கார்ப்ர்பரேட் வேளாண்மை மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஏற்கனவே அமெரிக்கா கவலை கொண்டிருந்தது. ஆனால் விவசாயத்தை மிகப் பெரும் வணிகமாக மாற்ற வேண்டும் என்றும், அரசு விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் பட்ஸ் கருதினார். அவர் குறைந்த பட்ச ஆதார விலையைப் போன்ற புதிய ஒப்பந்தக் கொள்கை (New Deal Policy F.D.ரூஸ்வெல்ட்டால் 1939 ல் துவங்கிய மாபெரும் பொருளாதார மந்தத்தின் போது கொண்டு வரப்பட்டத் திட்டம்) யின்படி பயிர்களுக்குத் தரப்பட்ட மானியத்தை எதிர்த்ததுடன் திறந்த வெளிச் சந்தை அணுமுறை ஒன்றுகுவிப்பு, கார்ப்பரேட்டு மற்றும் தொழில்துறை ரீதியிலான விவசாயம் ஆகியவற்றை ஆதரித்தார்.

உபரி உற்பத்தியை ஏற்றுமதி மூலம் நிர்வகிக்கலாம் என்றார். அவர் மிகவும் பிரபலமான ‘பெரிதாக மாறுங்கள் அல்லது வெளியேறுங்கள் (Get Big or Get Out)’ என்ற முழக்கத்தைக் கொடுத்தார்.

நடந்தது என்ன? இதோ ஒரு உண்மையான எச்சரிக்கை கதை.

ஒன்றிரண்டு வளர்ச்சி ஆண்டுகளுக்குப் பிறகு, பயிர்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. 1977-ல் அமெரிக்கா முழுவதும் இருந்த விவசாயிகள் வேலை நிறுத்தத்தை துவங்கினார்கள். ‘பெரிதாக மாறுங்கள்’ என்ற சொற்றொடர் அதிக அளவிலான விவசாய கடன்களுக்கு இட்டுச் சென்றது. நுகர்வு பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்த போது அது பண்ணைகள் திவால் ஆவதற்கு இட்டுச் சென்று கார்ப்பரேட்டுகள் மேலும் உறுதிபடுவதற்கு வழிவகுத்தது. .இதுவே 1980-களின் விவசாய நெருக்கடிக்கும் இட்டுச் சென்றது.

வில்லி நெல்சன், ஜான் மெலன்கேம்ப், நீல் யங் போன்ற நாட்டுப்புற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் இந்த நெருக்கடிக்குப் பதில் தரும் வகையில் மேலெழுந்தன. விவசாயிகளின் துயரங்கள் முடியவே இல்லை. 2013-லிருந்து, மீண்டும் ஒரு நெருக்கடியால் தாக்கப்பட்டு 2011 – 18 ற்குள் ஒரு லட்சம் குடும்பப் பண்ணைகள், 2017-18ல் மட்டுமே 12,000 குடும்பப்ப் பண்ணைகள் மூடப்பட்டன.

மிகச்சிறந்த அமெரிக்க குடும்பப் பண்ணைகள் இனி சாத்தியமில்லை. குடும்பப் பண்ணைகள் மூடப்பட்டு வருவது, கிராம கடைகள், பள்ளிகள், கால்நடைகள் போன்ற அதன் ஆதரவு சேவைகளும் மூட வழிவகுத்துள்ளது. 2011-15 ம் ஆண்டுகளில் 4,400 கிராமப் பள்ளிகள் மூடப்பட்டன. எஞ்சியிருக்கும் குடும்பப் பண்ணைகளும் வாழ்க்கையை நடத்துவது மேலும் கடினமாகி விட்டதால், ஒட்டு மொத்த விவசாய சமுதாயங்களும் சுருங்கிவிட்டன.

இதனால் கிராமங்கள் பிசாசு நகரங்களாக மாறி வருகின்றன. விவசாயிகள் தற்கொலைகள் மிகவும் பரவலாக நடைபெற்று வருவது, தேசிய விவசாய சங்கங்களும், பண்ணை உதவி மையங்களும் தற்கொலைத் தடுப்பு உதவி மையங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.

2018 பண்ணை மசோதாவில் ஐந்து கோடி டாலர்கள் மன நலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சுமார் 30% விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடும் விவசாயத் தொழில் அல்லாதவர்களுக்குச் சொந்தமாக உள்ளன. இதில் 2% வெளிநாட்டு உரிமையாளர்கள். அமெரிக்காவில் உள்ள பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் மிகப் பெரும் பண்ணைகளின் எண்ணிக்கை மொத்த பண்ணைகளின் எண்ணிக்கையில் வெறும் 4% தான். ஆனால் அவற்றின் உற்பத்தி மொத்த பண்ணை உற்பத்தியில் 66% ஆகும். இது குடும்பப் பண்ணைகள் வேகமாக குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்காவில் விவசாயப் பணிகளைச் செய்து வருபவர் தொகை 1970 களிலிருந்ததை விட இப்போது மூன்றில் இரண்டு பங்கு குறைந்து விட்டது. நான்கில் ஒரு பங்கு பண்ணைக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதற்கு உலகமயமாக்கலும், தொழில்நுட்பமுமே குற்றம் சாட்டப்படுகின்றன.

இது இந்தியாவில் நிகழ்ந்தால் என்னவாகும்? நிலமுள்ள விவசாயிகள் 14.6 கோடி பேருக்கும், ஒரு 14.4 கோடி விவசாயத் தொழிலாளர்களுக்கும் (விவசாயக் கூலிகளுக்கும்) யார் மாற்று வேலை தருவார்கள்?

அமெரிக்காவில் விவசாய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்வதிலும் ஒன்று குவிப்பு நடந்துள்ளது. அங்கு மிக அதிகமாக உற்பத்தியாகும் பயிர்களான மக்காச் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றில் முறையே 80%, 79% உற்பத்தியை வெறும் நான்கு நிறுவனங்கள் வாங்குகின்றன. (உலக அளவிலும் கூட விவசாய உற்பத்தி பொருட்கள் வணிகத்தை ஒருங்கிணைக்கப்பட்டப் பண்ணைகளைக் கொண்ட நான்கு நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. அவை: ஏபிசிடி (ABCD -quartet) நால்வர்கள் எனப்படும், ஏடிஎம்(ADM), பங்கீ,(Bungee), கார்கில்(Cargill), லூயிஸ் ட்ரேஃபஸ் (Louis Dreyfus) ஆகும்.)

விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் உற்பத்திப் பொருட்களை அரசின் தலையீடின்றி வாங்குவது என்பதே ஒரு செம்மையான ‘குழு ஏகபோக (oligopolistic)’ நிலையாகும்.

1969 ல் நுகர்வோர் செலவழிக்கும் ஒவ்வொரு டாலரிலும் 41 சென்ட்டுகள் விவசாயிகளுக்குக் கிடைத்தது. இப்போது அது படுவீழ்ச்சி அடைந்து 8-15 சென்ட்டுகளாகிவிட்டது.

இதனை தோராயமாக இந்திய நிலைமைகளுடன் ஒப்பிட்டால், தற்போது கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படும் கோதுமை மாவு கிலோ ரூபாய் 200-க்கு விற்கப்படும். அதேசமயம் விவசாயிகள் தங்கள் கோதுமைக்கு தொடர்ந்து கிலோவிற்கு அதே 20 ரூபாயையே பெறுவர். தனியார்மாக்குவது இடைத்தரகர்களை நீக்கி நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பதற்கே என்கிறார்களே?

விலையேற்றத்தால் ஒரு நுகர்வோராக நாம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இதற்கு 1971-ல் பட்ஸும், நிகசனும் எடுத்த முடிவையே குற்றம்சாட்டுகிறது பிபிசி யின் “நம்மை குண்டாக்கியவர்கள் (The Men Who Made Us Fat)” என்ற குறும்படம். அவர்களே, மக்காச்சோளம், கோலா நிறுவனத்திற்காக மலிவு விலை தொழிற்சாலை இனிப்பாக்கி (sweetner) யான உயர் ஃபிரக்டோஸ் சாறு (HFCS) மற்றும் துரித உணவு அதிகரிப்பு ஆகியவற்றின் மீது விவசாய உற்பத்தியின் கவனத்தைத் திரும்பச் செய்தனர்.

அது இன்றைய நவீன உலகத்தின் உடல் பருமன் நோய்க்கு இட்டுச் சென்றுள்ளது. உடல் பருமன் சர்க்கரை நோய்க்கும், இதய நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது. இங்கிலாந்தில் இந்த உடல் பருமன் நிலைமைக்கு தேசிய சுகாதார நிறுவனம் (NHS) கொடுக்கும் விலை 600-800 கோடி பவுண்டுகள். (சுமார் ரூ 60,000 கோடி முதல் ரூ 80,000 கோடி வரை) இதில், உலக உடல் பருமன் நோயின் தலைமையகமான அமெரிக்காவின் செலவ ஆண்டிற்கு $14,700 கோடி (சுமார் ரூ 10.87 லட்சம் கோடி).

எதிர்பாராதவிதமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ஃபிரக்டோஸ் சாறு (HFCS) கலப்படமானது என்பதை அண்மையில், இந்திய அறிவியல் மற்றும் சுற்று சூழல் மையம் வெளிக் கொண்டு வந்த ஹனிகேட் (Honeygate) ஊழல் வெளிப்படுத்தி உள்ளது.

நமது ஒரு சில கொள்கை முடிவுகள் எவ்வாறு சமூகத்தைப் பாதிக்கிறது என்பது ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகே தெரிய வரும்.

https://www.outlookindia.com/website/story/opinion-before-india-breaks-its-promises-the-cautionary-tale-of-the-american-kisan/368180

மனு கவுஷிக்

outlookindia.com தளத்தில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்