Aran Sei

விவசாயிகள் போராட்டம்: தனிச்சிறப்பானதாக்கும் நான்கு காரணிகள்

Image Credit : thewire.in

டெல்லியின் எல்லைகளை விவசாயிகள் முற்றுகையிட்டு ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பிறகு, டிசம்பர் 30-ம் தேதி நான்கு கோரிக்கைகளில் இரண்டில் அரசுக்கும் போராடும் விவசாய சங்கங்களுக்குமிடையே ஒருமித்த கருத்து உருவாகி உள்ளது. அரசாங்கம் இவ்வாறு இறங்கி வந்திருப்பதை தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன.

ஆனால் சர்ச்சைக்குரிய கோரிக்கை – மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வது- குறித்து ஜனவரி 4,ம் தேதி மீண்டும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், அவர்களுடைய கூட்டாளிகளும் இந்த புத்தாண்டில் வட இந்தியாவின் தெருக்களில், கடுங்குளிர் காற்றில், புத்தாண்டை வரவேற்க ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு இதே சமயத்தில் நடந்த ஷாஹீன்பாக் போராட்டத்தை இந்த கடுங்குளிர் எதிர்ப்பு போராட்டம் பலருக்கும் நினைவு படுத்தியது. விவசாயிகள் போராட்டத்தின், நிரந்தர காத்திருப்பு போராட்டம், பாடல்கள், நடனங்கள், சமூக சமையலறைகள் ஆகியவை கடந்த ஆண்டு நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிய ஆழமான நினைவுகளை தூண்டுகின்றன.

பல பஞ்சாபியர்களுக்கு இந்த போராட்டங்கள் சீக்கியர்களின் பத்தாவது குரு கோவிந்த் சிங்கின் நான்கு சாஹிப்சாதாக்கள் (மகன்கள்) சாம்கூர் போரில் கொல்லப்பட்ட சீக்கிய வரலாற்றின் மிருகத்தனமான டிசம்பரின் எதிரொலியாக தெரிகிறது. பஞ்சாப் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களது தியாகம் நினைவு கூரப்படும்‌. டிசம்பர் மாத கடைசி வாரம் “சாஹிதி பர்வ்” அல்லது தியாகிகள் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தியாகிகள் வாரத்தை குறிக்க, அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் உயிரிழந்த 22 விவசாயிகளின் சுவரொட்டிகளை எழுப்பி அவர்களை தியாகிகளாகவும் அறிவித்தனர்.

சாஹிப்சாதாக்களின் கதை-

‘தண்டா புர்ஜ்’ அல்லது குளிர் கோபுரத்தில் சிறையில் குரு கோவிந்த் சிங் அடைக்கப்பட்டிருக்க, பெரிய இரு மகன்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இளைய மகன்கள் இருவரும் குரு கோவிந்த் சிங்கின் தாயும் உயிருடன் சமாதியாக்கப்பட்டனர். சம்கூருக்கு அருகில் உள்ள நகரத்தைச் சேர்ந்த பீபி சரன் கவுர் என்ற 16 வயது பெண், பெரிய இளவரசர்களுக்கு முறையான இறுதிச் சடங்குகளைச் செய்ய இரகசியமாக முயன்ற போது பிடிக்கப்பட்டு சவத்தீயில் வீசி எறியப்பட்டாள். இந்தக் கதை ஒவ்வொரு சீக்கியர் வீட்டிலும் இளைஞர்களுக்கு வழிவழியாகக் கூறப்படும். இது போன்ற கதைகள் புது டெல்லியில் அவர்களை இதமாக வைத்திருக்கும்.

போராடும் விவசாயிகள் துணிச்சலுடன் இந்த கடுங்குளிரை மட்டுமல்ல, ஊடுருவும் அரசின் கண்காணிப்பு, மற்றும் குஜராத், உ.பி. மாநிலங்களில் விவசாயிகள் கைது ஆகியவற்றை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடன் கூட ஒரு மாதத்திற்கு முன்பு, நீர் பீரங்கிகள், கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுடன் சமூக ஊடகவியலாளர்களால் அவர்கள் மீது வீசப்பட்ட அவதூறுகளையும் அவர்கள் எதிர் கொண்டனர்.

இவ்வாறு துணிச்சலாக முன்னேறும் போதே அவர்கள் நான்கு விடயங்களில் ஒரு உண்மை சரிபார்ப்பையும் (reality check) வழங்கி உள்ளனர்.

1). கூட்டாட்சி முதன்மையானது

பஞ்சாபில் போராட்டம் முதல் முதலாக துவங்கிய போது, மத்திய அரசிற்கு மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்ற விவசாய சங்கங்களின் உரத்த குரலுடன் துவங்கியது. இதன் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை தொடர்ந்து சட்ட வல்லுநர்களுக்கிடையே விவாதமாக உள்ளது. 2020, செப்டம்பர் 27 அன்று சுமார் 30 விவசாய சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்த போது இந்த இயக்கத்திற்கான விதைத் தூவப்பட்டது. இப்போது மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முன்னணியில் இருக்கும் தர்ஷன் பால், பாஜக கூட்டாட்சி அமைப்பை புறக்கணிப்பதை அப்பட்டமாக காட்டி உள்ளது என அப்போது கூறியிருந்தார்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

ஒரு சராசரி பஞ்சாபி மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாஜக இந்திய கூட்டாட்சி மற்றும் மக்களாட்சியை குப்பையாக வீசி எறிவதற்கு எதிராக விரைவில் எழுந்து நிற்பார்கள் என அவர் நம்பினார். தற்போதைய பேச்சு வார்த்தைகளிலும் கூட விவசாய சங்கங்களின் முக்கிய சர்ச்சைகளில் ஒன்று கூட்டாட்சி மீதான தாக்குதல் ஆகும்.

2). அரசியல்வாதிகள் இல்லாத அரசியல் இயக்கம்

விவசாயிகள் சங்கங்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து விலகி இருப்பதை வெற்றிகரமாக பராமரித்து வருகின்றன. பாரதீய கிசான் சங்கத்திற்கு இது புதிதல்ல. வரலாற்று ரீதியாக, பிகேயூ (BKU) எந்த அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு அழுத்தம் தரும் குழுவாகவே எப்போதும் இருந்துள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார பேராசிரியர் கேசர் சிங் பான்கூ, இந்தச் செய்தியாளரை அண்மையில் பாட்டியாலாவில் சந்தித்தார்.

பிரகாஷ் சிங் பாதல் போன்ற விவசாயப் பின்னணியில் இருந்து வந்த இந்தப் பகுதியைச் சேர்ந்த பெரிய அரசியல்வாதிகள் தங்கள் நலனை இதற்கு வெளியே மாற்றிக் கொண்டு விட்டனர். மேலும் அவர்களுடைய ஆதரவு அவர்களுடைய அரசியலுக்காக வெறும் உதட்டளவில்தான் இருக்கிறது என்று விவசாயிகள் கருதுகின்றனர் என்று அவர் கூறினார்.

தற்போது விவசாயிகளின் அழுத்தத்தால் தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள சிரோமணி அகாலிதளம் கட்சி, சட்டங்களின் பரபரப்பு தணிந்தவுடன்  மத்திய அரசின் தேசிய முற்போக்கு கூட்டணியில் மீண்டும் சேரலாம் என்று பஞ்சாபின் மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் இதே கருத்தைத்தான் வைத்துள்ளனர். விவசாயத்தின் மூலமான அரசியல்வாதிகளின் அதிகாரமும், வருவாயும் மாறியதும் அவர்களின் ஆர்வமும் விலகி விட்டது என்று பான்கூ நம்புகிறார். இப்போது, அரசியல் கட்சிகள் ஏதாவது பிடி கிடைக்குமா என முயற்சித்து பார்த்துத் தோற்று விட்டனர். இருப்பினும் அரசியல் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருகின்றன. இது அரசியல் கட்சிகளுக்கு உதவுவதை விட சங்கங்களுக்கு உதவுகிறது‌

3) தகவல் பரப்புதல் சக்தி

பாஜக வின் ஐடி குழு உட்பட முக்கிய ஊடகங்கள் மிகப்பெரிய உண்மை சரிபார்ப்பை எதிர்கொண்டு அம்பலப்பட்டன. விவசாயிகள் இயக்கம் அவர்களுடைய இகழ்ச்சியான நிலையையும், பொருத்தமற்றத் தன்மையையும் எடுத்துக் காட்டி உள்ளது. அது. “செல்லப் பிராணி ஊடகங்களை (godi media)” புறக்கணிப்புடன் தொடங்கியது. “செல்லப் பிராணி ஊடகமே திரும்பி போ” என்று குர்முகி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய சுவரொட்டிகள் டிராக்டர் கழிவுப், பிற வாகனங்களிலும் ஒட்டப்பட்டன. இது எதிர்ப்புப் போராட்டத்தை பார்வையிட வந்தவர்களுக்கு எடுத்துச் செல்லக் கூடிய விடயமாக இருந்தது.

ஜீ நியூஸ் போராடும் விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்று கூறியது ஓட்டைப்பானையில் ஊற்றிய தண்ணீரானது. ஏனெனில் மத்திய அரசே போராடும் விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கும் மேலாக, அந்த போராட்ட களத்திற்குச் சென்று அங்கே கூடியிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் யாருக்கும் அங்கே பஞ்சாபிலிருந்து மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெகு தொலைவில் உள்ள கேரளாவிலிருந்தும் கூட வந்திருக்கிறார்கள் என்பது தெரியும். ஜீ நியூசின் ஐந்து விநாடி ஓடிய தீக்கக்கும் காணொளித் துண்டை வெளியிட்டவர்களை, அதற்குப் பிறகு காணவே இல்லை.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

விரைவில், பாஜகவின் ஐடி குழுத் தலைவர் அமித் மாளவியாவின் நாட்டைத் ‘தவறாக வழிநடத்தும்’ முயற்சி ‘(மோசடியாக) பயன்படுத்தப்படும் மீடியா’ என்று டிவிட்டரில் முத்திரை குத்தப்பட்டது. இம்மாதிரியான செயல் இந்திய டிவிட்டரில் நடப்பது இதுவே முதன்முறையாகும். டிவிட்டரின் இத்தகைய முதல் நடவடிக்கை ஆளுங் கட்சியின் ஐடி குழுவிற்கு எதிரானது என்ற உண்மை பாஜக வின் ஊடக மற்றும் தகவல் பரப்பு முனையின் நம்பகத்தன்மை குறித்து பெரும் கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளது.

மேற்கூறியவை யாவும் விவசாயிகளால் களத்தில் நடத்தப்படும் ஒரு இணையான தகவல் பரவல் முறையை உருவாக்க வழி வகுத்தன. டிவிட்டரில், Tractor2Twitter  அரசாங்கத்தால் இயக்கப்படும் ஐடி குழுவின் ஹேஷ்டேக்குகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செயல்பட்டது.

அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் விவசாயிகள் முன்னணி, தங்களது அன்றாட பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை ஒளிபரப்ப அதிகாரபூர்வ சமூக ஊடக சேனல்களையும் தொடங்கியது. ஏனெனில் பிற ஊடக சேனல்கள் அவற்றை ஒளிபரப்புவதில்லை.

இதற்கு இணையாக, ஒத்த எண்ணம் கொண்ட குழுவினர் ‘ட்ராலி டைம்ஸ்’ என்ற ஒரு அச்சு செய்தித்தாளை கொண்டு வந்தனர். இந்த மூன்று முன்னெடுப்புகளையும் செய்தவர்கள், “ஊடகங்கள் உண்மையை காட்டுவதில்லை” என ஒரே மாதிரியாக கூறினர். எனவேதான் விவசாயிகள், தகவலுக்கான உற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற தேவை இருந்தது.

4). உணவுப் பாதுகாப்பு பிரச்சினை

வேளாண் வணிக நிறுவனங்கள், பெருமளவிலான ஒப்பந்த விவசாயம் செய்து கொள்ளவும், உணவுப் பொருட்களைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் அனுமதியும் வழங்கப்படுவது உணவுப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதற்கு வழி வகுக்கும் என பஞ்சாபில் உள்ள சில நடுத்தர வகுப்பினர் நம்புகின்றனர். இவர்கள் இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுடன் இருக்கிறார்கள்.

ஆனால் இதே பற்றி இதுபற்றி அரசாங்கம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சண்டிகாரின் நடுத்தர வர்க்கத்தினர் இந்த மாதத் துவக்கத்தில் வசதியானவர்கள் வசிக்கும் 17ம் பிரிவில் ஒன்று கூடினர். அவர்கள், புதிய சட்டங்களால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து விடும் என நம்புவதால் நாங்கள் இந்தப் இயக்கத்தில் இணைத்துள்ளோம் எனக் கூறினர்.

இவையெல்லாம் தவிர, அரசு மண்டிகளிலிருந்து நேரடி கொள்முதல் செய்வது சீர்குலைந்து போனால், அதை நேரடியாக சார்ந்திருக்கும் பொது விநியோக முறையும் பாதிக்கப்படும் என்கின்றனர், விவசாயத் தொழிலாளர்கள். இது பலரின் வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். பல பொருளாதார, வேளாண் வல்லுனர்கள், அரசாங்கம் மண்டியிலிருந்து கொள்முதல் செய்வதைத் நிறுத்தி விடுவதோடு, 2013-ம் ஆண்டின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தையும் திருத்த முயற்சிக்கும் என்று அனுமானிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்குப் பிறகும், எந்தவித தீர்வும் ஏற்படும் கண்ணுக்குத் தெரியாத நிலையில், புது டெல்லியின் ஐந்து எல்லைகளும் முற்றிலும் போராட்டக்காரர்களால் காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் இயக்கத்தின் வேகம் அதிகரித்து வருகிறது.

– பவன்ஜோத் கவுர்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்