Aran Sei

சென்னை ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் மூடப்படுகிறது – 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

மெரிக்காவை சேர்ந்த வாகன நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் மூடப்பட்ட நிலையில் இந்தியாவிலும் மூடப்படவுள்ளது.

இந்தியாவில் பல வகை கார்களை உற்பத்தி செய்துவரும் ஃபோர்டு நிறுவனம் லாபமின்றி தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருவதாகவும், பல்வேறு புதிய மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்தும் நஷ்டமே ஏற்பட்டு வருவதால் உற்பத்தி குறைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர், குஜராத்திலுள்ள சனண்ட் ஆகிய இடங்களில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலைகளை மூட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு, அமெரிக்காவில் இருந்து நேரடியாக கார்களை இறக்குமதி செய்யப்படும் என்றும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.

10 விழுக்காடிற்கும் குறைவாக திறனில் இயங்கி வரும் குஜராத் ஆலை முதலில் மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை மறைமலைநகர் ஆலையானது நிலுவையில் உள்ள உலகளாவிய ஆர்டர்களை தயாரிக்க 2022 ஆம் ஆண்டு வரை செயல்படவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும், குஜராத்திலுள்ள சனண்ட்டில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் இஞ்சின் உற்பத்தி ஆலை செயல்படவுள்ளது.

இந்தியாவில் உள்ள இரண்டு ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகளும் மூடப்படவுள்ளதால், சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Source: Economic Times

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்