Aran Sei

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் – பாதிக்கப்படும் தொழிற்துறை – பாஜக, காங்கிரஸ் மோதல்

த்திய அரசின் விவசாயச் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் மறியல் செய்து வருகிறார்கள். இதனால், வேளாண் பதப்படுத்துதல், பொறியியல், உள்ளாடை, மருந்து, ஜவுளி, வாகன உபகரணங்கள் போன்ற தயாரிப்பாளர்களுக்கு மூலப்பொருட்களின் வருகை குறைந்துள்ளதாகவும், மாநிலத்திற்குள் பொருட்கள் விற்பனையும் நிறுத்தப்படும் நிலையில் உள்ளதாகவும் ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ஞாயிற்றுக்கிழமையன்று பாஜக தலைவர் நட்டாவுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் எழுதியிருந்தார். பஞ்சாபுக்குச் சரக்கு ரயில் போக்குவரத்து தடைபட்டிருப்பது, பொருட்கள் வரத்தை முடக்கி, மாநிலத்தை நெருக்கடியில் தள்ளி விடும் என்று அவர் கவலை தெரிவித்திருந்தார்.

நிலக்கரி இருப்பு ஏற்கனவே குறைந்து விட்டிருக்கிறது. இது மின் உற்பத்தியில் தடை ஏற்படுத்தும் என்று tribuneindia செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், உரம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு பற்றி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை (நவம்பர் 4) பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்த விவகாரத்தை முடிக்க பஞ்சாப் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது. இந்தப் பாதிப்புக்கான முழுப் பொறுப்பும் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் அரசுக்குத்தான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பஞ்சாபில் விவசாயிகள் செய்து வரும் ரயில் மறியல், மாநில அரசின் செயலற்ற தன்மையால் தான் ஏற்பட்டது என்றும், “சட்ட ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு. அவர்கள் விவசாயிகளுடன் போய் பேசலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.” என்று கண்டித்துள்ளார்.

இந்நிலையில், 30 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு நவம்பர் 20-ம் தேதி வரை சரக்கு ரயில்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது என்று ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

தங்கள் போராட்டங்களை ரயில் பாதைகளில் இருந்து, அருகிலுள்ள பகுதிகளுக்கு மாற்றுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். பஞ்சாபில், 32 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருவதால், ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த மாதம் மட்டும் ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

‘மத்திய அமைச்சரை வரச் சொல்லுங்கள்’ – விவசாயச் சங்கங்கள்

“முன்பே  நாங்கள் நவம்பர் 5-ம் தேதி வரை சரக்கு ரயில்களைச் செல்ல அனுமதித்தோம். இப்போது அதை நவம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் சர்வாதிகார அணுகுமுறையையும் பஞ்சாப் விவசாயிகள் மீதான பாகுபாட்டையும் எதிர்க்கவே இந்தப் போராட்டங்களைச் செய்து வருகிறோம்.” என்று பாரத் கிசான் யூனியனின் (டகவுண்டா) பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங், ‘தி இந்து’விடம் கூறியுள்ளார்.

ரயில் மறியல் போராட்டம் செய்துவரும் பஞ்சாப் விவசாயிகள் (நன்றி : bhaskar.com)

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

மத்திய மாநில அரசுகளுக்கிடையில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், மாநிலத்தின் தொழில்துறை இயல்பு நிலைக்குத் திரும்புவது கடினம் என்று முன்னணி தொழிற்துறையினர் எச்சரித்துள்ளதாக ’தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

”ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை மோசமாகிவிட்டது. மாநிலத்தில் 90% க்கும் மேற்பட்டவை, இந்த வகை நிறுவனங்கள்தான். இவை சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி 50 சதவீதம் குறைந்துவிட்டது .” என்று இந்திய ஃபாஸ்டெனர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பம்ரா ’தி இந்து’விடம் தெரிவித்தார்.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

மேலும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் தயாரிப்புகளைச் சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை. அதன் காரணமாக கடுமையான அபராதங்களைச் செலுத்துகிறோம் என்றும், “இதனால், தோராயமாக ரூ.5,000 கோடி இழப்பை எங்கள் தொழில் சந்தித்துள்ளது” என்றும் நரிந்தர் பம்ரா கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்