Aran Sei

மாநிலப் பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – நிர்மலா சீதாராமன்

credit: hindustantimes.com

வேளாண்மை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களும் விவாசயிகளுக்கு நன்மை பயக்கும் என்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளர்.

சென்ற மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், வேளாண்மை தொடர்பான மூன்று மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன. அச்சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் விவசாயிகளுக்கு தீமையை உண்டாக்காது என்று கூறியுள்ள நிர்மலா சீத்தாராமன் இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமையையும் யாருக்கு விற்க வேண்டும் என்ற உரிமையையும் வழங்குகிறது என்று கூறியுள்ளார்.

தற்போதும்கூட விவசாயிகள் தங்களது விலைப்பொருட்களை மற்ற இடங்களிலோ அல்லது வேறு சிலருக்கோ விற்க முடிவதில்லை. இச்சட்டங்கள் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

மாநில பட்டியலில் உள்ள வேளாண்மை மீது எப்படி மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடியும் என்ற விமர்சனம் பற்றி நிர்மலா சீத்தாராமன் பேசுகையில், விவசாயம் மாநில பட்டியலில் உள்ளது உண்மைதான். மாநிலங்களுக்கு இடையில் விவசாயப் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் மத்திய அரசின் பட்டியலில் வருகிறது என்று கூறினார்.

“இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எங்கு வேண்டுமென்றாலும் யாருக்கு வேண்டுமானாலும் எந்த விலையிலும் விற்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. ஆன்லைன் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும்போது உடனடியாக ரசீது கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், மூன்றில் இரண்டு பங்கு பணத்தை அன்றே கொடுக்க வேண்டும். எஞ்சியுள்ள ஒரு பங்கை முப்பது நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த சட்டங்களினால் விவசாயிகளுக்கு நட்டம் ஒன்றும் கிடையாது. விவசாயிகளின் நலன் சட்டத்தில் உத்திரவாதம் செய்யப்பட்டுள்ளது” என்று நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

விவசாய ஒப்பந்த சட்டம் குறித்து அவர் பேசும் போது “விவசாயிகளுடன் வியாபாரிகள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் காரணமாக வேளாண் நிலங்களை கைப்பற்றிவிடுவார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே, கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் சக்கரை ஆலைகளுக்கும் ஒப்பந்தங்கள் நிலவுகின்றன. கரும்பு விவசாயம் செய்யும் வேளாண் நிலங்களை சக்கரை ஆலைகள்  தனதாக்கி கொள்கிறதா என்ன? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

அடிப்படை ஆதார விலை தொடருமா என்ற கேள்விக்கு அடிப்படை ஆதார விலை தொடரும் என்று நிதி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

ஒப்பந்தங்களை பெரும் நிறுவனங்கள் மீறினால் சிறு விவசாயிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு “முதலில் இது போல் நடக்காது. ஒருவேலை நடக்கும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் மட்டத்தில் இந்த பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.. நீதிமன்றங்களுக்கு போக வேண்டிய அவசியம் விவசாயிகளுக்கு வராது” என்றும் உறுதிபட தெரிவித்தார்.

மத்திய அரசு கூடுதலாக செலவு செய்ய திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு தற்போதைக்கு அது தொடர்பாக பதில் எதுவுமில்லை என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்