Aran Sei

தலைப்புச் செய்திகளுக்காக அறிவிப்புகள் விடும் பாஜக – ப.சிதம்பரம் விமர்சனம்

பொருளாதாரம் மைனஸில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக தலைப்புச்செய்தி கொடுப்பதற்கு தான் அறிவிப்புகள் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

தத்தளிக்கும் பொருளாதாரம் – பேரிடியாய் கொரோனா

இதைத் தொடர்ந்து ஜூலை-செப்டம்பர் மாத 2-வது காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் சரியும் என்று ரிசர்வ் வங்கியின் மாதாந்திர ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் மேலும், மைனஸ் 9.5 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 12), டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “எரிசக்தி நுகர்வு வளர்ச்சி அக்டோபரில் ஆண்டுக்கு 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

`இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியைக் கண்டுள்ளது’ – நிர்மலா சீதாராமன்

மேலும், “தினசரி சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களின் எடை அளவு 12 சதவீதத்திலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 20 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் மாதாந்திர ஆய்வறிக்கையை பற்றி கூறும்போது, “ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி, கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2020-21-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்குத் திரும்புவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது” என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம்: நிச்சயமற்ற நிலையில் மாநிலங்கள்

“தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக மட்டுமல்ல. வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாகவும் இந்தப் பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ளதாக முக்கியப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதுள்ளனர்.” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து நேற்று (நவம்பர் 12) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில், “ நடப்பு நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸில் சென்றுள்ளது. மீதமுள்ள 2 காலாண்டுகளும் இதேபோன்று மைனஸில் செல்லவே வாய்ப்புள்ளது. பொருளதாரத்தை மீட்டெடுக்க முறையான திட்டங்கள் மத்திய அரசிடம் இல்லை.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“எலியைப் பிடிக்க மலையைக் குடைவதா?” – ப.சிதம்பரம்

அதற்கு மாறாக,  பொருளாதார மந்த நிலை குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கையிலிருந்து திசைதிருப்பும் செயல்களிலும், நாளேடுகளில் தலைப்புச்செய்தி கொடுக்கவும் தான் மத்திய அரசு ஆர்வத்துடன் செய்லபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “விவசாயிகளுக்கு நியாயமான ஊக்கம் தரும் விலையை அளித்தல், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை மக்களின் கையில் பணம் வழங்குதல், அமைப்புசார்ந்த தொழில்களில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மாநில அரசுகளுக்கு அதிகமான நிதி வழங்குதல் போன்றவை மூலமே பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும்.” என்று பட்டியலிட்டுள்ளார்.

‘வெறும் பேச்சினால் பயனில்லை, மக்கள் கையில் பணத்தைக் கொடுங்கள் ‘ – ப.சிதம்பரம்

மாநிலங்களுக்கு நிதி வழங்குவதைக் குறைத்தால், மாநில அரசுகள் 2020-21-ஆம்ஆண்டில் தங்களின் முதலீட்டுச் செலவைக் குறைத்துவிடுவார்கள் என்றும் இதனால் நடப்புநிதியாண்டில் பொருளாதாரத்தை மீட்டு கொண்டு வருவது, வெறும் பிரார்த்தனையாக மட்டுமே இருக்கும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  ஜெய்ராம் ரமேஷ், நேற்று (நவம்பர் 12) பத்திரிக்கையாளர்களிடம்  கூறுகையில் “ 2020-21ம் நிதியாண்டின் மற்ற இரு காலாண்டுகளின் பொருளாதார வளர்ச்சியும் மைனஸில் செல்லும் அச்சம் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது என்ற ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மூடிமறைக்கவே, 3-வது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.” என்று   கூறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத் தேக்கம் – ரிசர்வ் வங்கி குழு என்ன சொல்கிறது?

மூன்றாவது காலாண்டின் ஒன்றரை மாதங்கள் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்றும் 3-வது காலாண்டில் முன்னேறறம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் துணை புரியாது. இந்த மிகப்பெரிய அறிவிப்புகளின் தாக்கமானது, வர்த்தகம், தொழில், வியாபாராம், குறிப்பாக நடுத்தர, சிறு குறுந்தொழில்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.” என்று ‘தி இந்து’  தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்