Aran Sei

ஐரோப்பிய ஒன்றியம் : 14% ஆண்-பெண் ஊதிய பாகுபாடு. கொரோனா மேலும் தீவிரப்படுத்தியது

Image Credit : thehindu.com

பெண் ஊழியர்களுக்கும் ஆண் ஊழியர்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாடு பற்றிய அறிக்கைகளை நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியினால் ஆண் தொழிலாளர்களை விட பெண் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 250 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்கள் இந்த தரவுகளை தாக்கல் செய்யும்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சில்லறை வர்த்தகம், பயணம், தங்குமிடம் ஆகிய துறைகள் கொரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், வேலை இழப்புகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்று லிங்க்ட்-இன் தெரிவிக்கிறது. “இந்த உழைப்புச் சந்தை பலவீனம், பணியிடத்தில் சம ஊதியத்தை நோக்கிய முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளது” என்றும் அது கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முகமையான யூரோஃபவுண்ட், “பெருந்தொற்றின் முதல்கட்ட சுமைகள், குறைந்த ஊதியம் பெறும் பெண் தொழிலாளர்கள் மீது அளவுக்கு அதிகமாக விழுந்துள்ளன” என்று கூறியுள்ளது.

மேலும், 27 தேசங்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில், பெண் ஊழியர்கள் ஆண் ஊழியர்களை விட சராசரியாக 14% குறைந்த ஊதியம் பெறுகின்றனர். இந்த இடைவெளி லக்சம்பர்கில் 1.4% ஆகவும், எஸ்டோனியாவில் மிக அதிகமாக 21.8% ஆகவும் உள்ளது.

பெண் ஊழியர்கள் ஆண் ஊழியர்களுடன் ஒப்பிடும் போது ஆண்டுக்கு 2 மாதங்கள் கூடுதல் ஊதியம் இல்லாத உழைப்பை கொடுக்கிறார்கள் என்பது இதன் பொருள்.

ஆண்களை விட குடும்ப பொறுப்புகளை அதிகமாக சுமக்கும் பெண்களுக்கு, அதிகமான முறை வேலையிலிருந்து விடுப்பு எடுப்பதும், குறைந்த நேரம் வேலை செய்வதும் அவசியமாகிறது.

குறைந்த ஊதியம், அதிக பணி இடைவெளிகள் இரண்டும் சேர்ந்து பெண்கள் பெறும் ஓய்வூதியத் தொகை 30% வரை குறைவாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகள் தெரிவிப்பதாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.

இந்த வேறுபாடுகளை குறைக்கும் நோக்கத்தில், இது தொடர்பான வெளிப்படைத்தன்மையை கோரும் சட்ட மசோதாவை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்க உள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்