Aran Sei

உச்சத்தில் முட்டை விலை – காரணம் சொல்லும் சங்கத் தலைவர்

முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணை கொள்முதல் விலை 5.25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று அறிவித்துள்ளது. தமிழக பண்ணை கொள்முதல் முட்டை விற்பனை வரலாற்றிலேயே இதுதான் உச்ச விலை.

நேற்று முன்தினம் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 4.80 ரூபாயாக இருந்த முட்டை விலையை மேலும் 25 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5.05 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் பண்ணை கொள்முதல் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை 5.05 ரூபாயாக இருந்த முட்டை விலை இன்று முதல் மேலும் 20 காசுகள் உயர்த்தப்பட்டு, 5.25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களில் முட்டை விலை 45 காசுகள் உயர்ந்துள்ளது. 2017-ஆம் நவம்பர் மாதம் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.16 ரூபாயாக இருந்ததே இதுவரை அதிக பட்ச விலையாக இருந்தது.

நன்றி : The Indian Express

தமிழகத்தின் முட்டை உற்பத்திக் கேந்திரமாக நாமக்கல் மாவட்டம் விளங்குகிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் தோறும் 3.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும் 20 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மீதமுள்ள முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும்  தமிழகத்தின் பிற பகுதிகளுக்கான விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது.

முட்டை உற்பத்தி குறைவு, ஊரடங்கு தளர்வுகள் மற்றும் புரட்டாசி மாத நிறைவின் காரணமாக முட்டை நுகர்வு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளது. மேலும் கொள்முதல் விலையோடு இதர விற்பனை செலவுகளையும் சேர்த்தால், சென்னை போன்ற பெருநகரங்களில் சில்லறை விலை மேலும் அதிகரிக்கும்.

இந்த விலையேற்றம் குறித்து நாமக்கல் மாவட்டம் சிறு குறு தொழில் சங்க தலைவர் இளங்கோவுடன் அரண்செய் பேசியபோது, “முதல் காரணம் இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் தங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள முட்டையை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். இரண்டாவது கொரோனா வந்த புதிதில் ஒரு ரூபாய்க்கு முட்டை விற்கப்பட்டது. அதனால் அப்போது கோழி வளர்ப்பு தொழில் செய்து வந்த பலர் அதைக் கைவிட்டனர். பெரிய அளவில் இந்தத் தொழில் செய்பவர்களும் அதைக் குறைத்துக்கொண்டனர். அதனால் இப்போது ஒரு கோடி வரையிலான முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. முட்டை உற்பத்தி உயர்ந்து வருவதற்கு ஆறு மாதம் ஆகும்.” என்று கூறினார்.

மேலும், “இப்போதைக்கு முட்டை விலை குறைய வாய்ப்பில்லை. அப்படியே குறைந்தாலும் 4.50 ரூபாய், 4.70 ரூபாய் வரைக்கும்தான் குறையும். இப்போது நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலை 5.25 ரூபாய். இதன் விற்பனை செலவோடு சேர்த்து 6 ரூபாய் வரை சில்லறை விற்பனையில் விலை உயர வாய்ப்புள்ளது. “ என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்