Aran Sei

பொருளாதாரத் தேக்கம் – ரிசர்வ் வங்கி குழு என்ன சொல்கிறது?

Credits: Indianexpress

ணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் கொடுப்பதற்கான (ரெபோ) வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வந்தது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் கூட்டத்தின் முடிவுகளை அறிவித்துள்ளார்.

ரெபோ விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 4% ஆக தொடர்வதற்கு நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளார்கள். எனவே, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார்.

தேவைப்படும் காலம் வரையிலும், குறைந்தது இந்த மற்றும் அடுத்த நிதியாண்டின் இறுதி வரையில் தாராளமான நிதிக் கொள்கையைப் பின்பற்றுவதாகக் குழு முடிவு செய்தது என்றும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

”முதலாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 23.9% வீழ்ச்சியடைந்த பிறகு, ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டு வருகின்றன. உற்பத்தியும் படிப்படியாக மீட்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர்ச் சூழலால் 2021-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5% அளவில் வீழ்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

credits: moneycontrol

செப்டம்பர் 2020-க்கான உற்பத்திக் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு 2012 ஜனவரிக்குப் பிறகு அதிக அளவாக 56.5% எட்டியிருக்கிறது.

ரிசர்வ் வங்கி வணிக வங்கிளுக்குக் கடன் கொடுப்பதற்கான வட்டி வீதம் 4.2% என்றும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் பணம் வைத்திருப்பதற்கான வட்டி வீதம் (ரிவர்ஸ் ரெபோ) 3.35% என்றும் உள்ளது. மேலும் இது தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சந்தைப் பங்கேற்பாளர்களுக்குப் பணப்புழக்கம், எளிதான நிதி நிலைமைகளை உறுதி செய்யவேண்டி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற வேண்டிய இந்தக் கூட்டம் நிதிக் கொள்கைக் குழுவில் மூன்று உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்ததால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

பொருளாதார நிபுணர்கள் அஷிமா கோயல், ஜெயந்த் ஆா்.வா்மா மற்றும் சசாங்க் பிடே ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிறகு தற்போது இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

ரெபோ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாதது குறித்து பொருளாதார அறிஞர் சோம வள்ளியப்பனிடம் அரண்செய் பேசிய போது, “இது எதிர்பார்த்த அறிவிப்புதான். சூழ்நிலைச் சிறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள முடிவு இது. கொரோனாவால் பலரும் வேலையிழந்துள்ள நிலையில், வட்டி விகிதத்தைக் குறைத்திருந்தாலும் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்