பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடைமுறை எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடத்தப்படும் என்று அதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிதி அமைச்சக அதிகாரி துஹின் கந்தா பாண்டே கூறியுள்ளார்.
“2004-ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக, ஏர் இந்தியா, பிபிசிஎல் உள்ளிட்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படவுள்ளன” என்று கூறியுள்ள அவர், “இந்தச் செயல்முறை மீது யாரும் குறை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சுத்தமாக இது செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.
“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்
புதிய தனியார்மய கொள்கை முன்பை விட தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 439 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலானவற்றில் மத்திய அரசு தனது பங்குகளை விற்கவுள்ளது.
ஒவ்வொரு நிறுவனமாக முடிவு செய்யப்படுவதற்கு, போர்தந்திர முக்கியத்துவம் இல்லாத துறைகளில், 151 பொதுத்துறை நிறுவனங்களை (83 தாய் நிறுவனங்களும், 68 துணை நிறுவனங்களும்) விற்க ஒரே அடியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆண்டில் 2 பொதுத்துறை வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படவுள்ளன.
“யார் அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் ஏலத்தில் வெற்றி பெறுவார்கள். எங்களது கவனம் விலையை அதிகபட்சமாக்குவதில்தான் உள்ளது. எனவே, அளவுக்கு அதிகமான நுழைவு தடைகளை நாங்கள் வைக்கவில்லை.” என்று முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் நிர்வாகத் துறையின் செயலாளர் ஆன துஹின் பாண்டே கூறியுள்ளார்.
“தொழில்நுட்ப நிபந்தனைகளைக் கூட நாங்கள் விதிக்கப் போவதில்லை. குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று சொன்னால் அது மதிப்பை மட்டுப்படுத்தி ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும். வணிக நிலைமை இனிமேலும் அவ்வாறு இல்லை. மூலதனம் வைத்திருக்கும் நிறுவனங்கள் தொழில்முறை நிபுணர்களையும், உயர்நிலை மேலாளர்களையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.
“முதலாளித்துவம் அதிர்ச்சிகள் நிறைந்தது. இங்கும் அத்தகைய அதிர்ச்சிகள் நடக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றால் ஒரு சில நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். அரசு அவற்றுக்கு இனிமேலும் ஆதரவு அளிக்கப் போவதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
“ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்துக்கும் முதலீட்டாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள் என்று சொல்ல முடியாது” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
போர்தந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாக அடையாளம் காணப்பட்ட 4 துறைகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மட்டும் வைத்துக் கொள்ளப்படும்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர் சி லகோத்தி தலைமையிலான தனியார்மயத்தை கண்காணிக்கும் இப்போதைய கமிட்டி, விலை நிர்ணயிக்கும் கொள்கை போன்றவற்றில் தொடர்ந்து வழிகாட்டி வரும், தனித்த பரிவர்த்தனைகளை அது கண்காணிக்காது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
“இந்த நிறுவனங்களை வாங்க முன் வருபவர்கள் யார் என்ற விபரம் எனக்குக் கூடத் தெரியாது. வாங்க முன்வருபவர்களிடமிருந்து நிதி ஏல விபரங்களை பெறுவது வரை குறைந்தபட்ச விலை கூட தீர்மானிக்கப்படாது. ஏனென்றால், யாருக்காவது விலை விபரம் தெரிந்து விட்டால் அவர்களுக்கு நியாயமற்ற ஆதாயம் கிடைத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.
2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சில பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டது தொடர்பாக, பின்னர் புலனாய்வு நிறுவனங்களும் தணிக்கையாளர்களும் பரிசீலனை செய்தனர். சொகுசு தங்கும் விடுதி ஒன்றை விற்றது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி மீதும், முன்னாள் தனியார்மய செயலர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யும்படி மத்திய புலனாய்வு அலுவலகத்துக்கு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.