Aran Sei

தனலட்சுமி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி : முதலீட்டாளர்கள் கலகம்

ங்குச்சந்தையில் வங்கிப் பங்குகளுக்கு இது போதாத காலம். விஜய் மல்லையா ஆரம்பித்து வைத்த வாராக் கடன் பிரச்சனை நீரவ் மோடி மோசடிக்கு பிறகு பூதாகரமாக வெடித்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டாலும் போன பணம் இதுவரை திரும்பி கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு வங்கியிலும் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.

மத்திய அரசும் அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் ஒன்றிணைத்து நான்கு பெரிய வங்கிகளாக மாற்றியுள்ளது. இதன் மூலம் செலவினங்கள் குறையும், வங்கியின் லாபம் உயரும் என்று வங்கி இணைப்பிற்கு காரணம் கூறுகிறது.

இந்தியாவில் இருந்து தப்பியோடிய மல்லையாவையும், நீரவ் மோடியையும் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர முடியவில்லை. அவர்கள் திரும்பி வந்தாலும் அவர்கள் ஏமாற்றிய பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதே யதார்த்தமாக உள்ளது.

இதன் காரணமாக பாரத ஸ்டேட் வங்கியை தவிர்த்து அனைத்து பொதுத்துறை வங்கிகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் தமது உச்ச பங்கு விலையில் இருந்து 80% வரை குறைந்திருக்கின்றன.

உதாரணமாக பேங்க் ஆஃப் பரோடா பங்கு 2017-ம் ஆண்டு அதிகபட்சமாக ரூ 215 என்ற அளவில் விலை போனது. ஆனால் அதன் இன்றைய விலையோ வெறும் நாற்பத்தி ஒரு ரூபாய்.
பஞ்சாப் நேஷனல் பேங்க்-ன் பங்கு 2017-ம் ஆண்டு அதிகபட்சமாக ரூ. 232 ரூபாய்க்கு பங்குச் சந்தையில் விற்பனை ஆனது. அதன் இன்றைய விலை வெறும் 22 ரூபாய்.

ஒரு முதலீட்டாளர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் மூன்று ஆண்டுகளில் அதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாக குறைந்து இருக்கும். நீரவ் மோடி பங்குச் சந்தையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அதுபோல பாரத ஸ்டேட் வங்கி தவிர மற்ற எந்த பொதுத்துறை வங்கியும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் (ஈவுத்தொகை) எதுவும் வழங்கவில்லை.

இந்த விலை வீழ்ச்சி காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் வங்கிகளின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி இந்த வார பங்கு சந்தையில் இரண்டு வங்கிகளில் வெடித்துள்ளது பங்குச் சந்தையில் மிகப்பெரிய பேசுபொருள் ஆகியுள்ளது.

கேரளாவில் திருச்சூரை தலைமையிடமாக கொண்ட தனலட்சுமி வங்கி கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக சுனில் குர்பாக்சினி என்பவர் பல ஆண்டுகளாக உள்ளார். கடந்த வாரத்தில் வங்கியின் தொழிலாளர் சங்கம் சார்பாக சுனில் மீது புகார் தரப்பட்டது.

இந்த வாரம் வங்கியின் முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தலைவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த ஓட்டெடுப்பில் 90 சதவிகித முதலீட்டாளர்கள் சுனிலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவருடைய தலைமையில்தான் வங்கி வீழ்ச்சியை சந்தித்தது. அதனால் வங்கி தலைமையை மாற்ற வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் நிலைப்பாடு.

குறிப்பாக சுனில் வட இந்தியர்களின் ஆதிக்கத்தை வங்கியில் அதிகரிக்க முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை முதலீட்டாளர்கள் முன்வைத்துள்ளனர். மலையாளிகளை ஓரம் கட்டி விட்டு வட இந்தியர்களை அந்த இடத்தில் கொண்டு வருவதை முதலீட்டாளர்கள் விரும்பவில்லை. இதுவும் சுனிலுக்கு எதிராக அவர்கள் வாக்களிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது

ஒரு வங்கியின் தலைவரை இதுபோல முதலீட்டாளர்கள் சேர்ந்து ஓட்டெடுப்பு மூலம் மாற்றிய நிகழ்வு முன் எப்பொழுதும் நிகழ்ந்தது கிடையாது. அதனால் ரிசர்வ் வங்கி உடனடியாக இரண்டு ஆண்டுகளுக்கு காஷ்யப் என்பவரை பொறுப்பதிகாரியாக நியமித்துள்ளது.

கடந்த வாரம் இதே போன்ற நிகழ்வு லட்சுமி விலாஸ் வங்கியில் நடைபெற்றது. வங்கி தலைமையில் இடம்பெற்றிருந்த 7 டைரக்டர்களை (இயக்குனர்களை) எதிர்த்து முதலீட்டாளர்கள் வாக்களித்திருந்தனர். மேலும் வங்கி உடைய ஆடிட்டர் குழுவிற்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நிர்வாகக் குழுவில் பெரிய மாறுதல்களை செய்ய வேண்டிய முடிவிற்கு அந்த வங்கி தள்ளப்பட்டது.

பல வங்கிகளில் தவறான நடவடிக்கை காரணமாகவும், அந்தத் தவறான நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய ரிசர்வ் வங்கி மற்றும் அரசு காரணமாகவும் வங்கித்துறை அதல பாதாளத்தை சந்தித்துள்ளது. தனது முதலீட்டு பணத்தை இழந்து உள்ள முதலீட்டாளர்கள் கடும் மன உளைச்சலுடன் உள்ளனர். பொதுத்துறை வங்கிகள் மீண்டும் எழ வேண்டும், அதற்கு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– ஷியாம் சுந்தர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்