Aran Sei

கொரோனா முழு அடைப்பு காலத்தில் பணப்பையை இறுக்கிக் கொண்ட மத்திய அரசு – மகேஷ் வியாஸ்

வெளியில் தெரிவதற்கு மாறாக, 2021-22 நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, பழமைவாத நிதிக் கொள்கையையே பின்பற்றுகிறது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.

2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டின் போது, பொருளாதாரம் கொரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட போது, மத்திய அரசின் செலவினம் முந்தைய ஆண்டை விடக் குறைவாக இருந்தது என்று, எகனாமிக் டைம்ஸ்-ல் மகேஷ் வியாஸ் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.

மத்திய பட்ஜெட் 2021 : ”இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பட்ஜெட்” – அதானி புகழாரம்

அதிகரித்த அரசு செலவினங்கள் மூலம் பொருளாதாரத்துக்கு பெருமளவு உதவி தேவைப்பட்ட முழு அடைப்புக் காலத்தில் இவ்வாறு செலவு குறைக்கப்பட்டது புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்று அவர் கூறுகிறார்.

சென்ற ஆண்டின் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மத்திய அரசின் செலவினம், முந்தைய ஆண்டின் அதே மாதங்களை விட முறையே 9.5%, 48.3%, 29.1% அதிகரித்தது. இதன் விளைவாக, 2020-21 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் அரசின் செலவு 2019-20-ன் முதல் மூன்று காலாண்டுகளின் செலவை விட 8.1% அதிகரித்தது என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொரோனா பெயரால் ரூ.241 கோடி குவித்த பாபா ராம்தேவ் – நவநீத கண்ணன்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், 2020-21 நிதியாண்டுக்கான அரசு செலவினம் 28.4% அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். 2008-09 நிதி நெருக்கடியின் போது இந்திய அரசின் செலவு 24% அதிகரித்தது என்பதுடன் இதை ஒப்பிட வேண்டும் என்று கூறும் மகேஷ் வியாஸ், கொரோனா முழு அடைப்பு, நிதித்துறை நெருக்கடியை விட பல மடங்கு மோசமானது என்பதால் அதிக அளவு செலவை கோருகிறது என்றும் கூறியுள்ளார்.

பொதுமுடக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடு – காரணம் என்ன?

ஆனால், அரசின் செலவினம் பட்ஜெட் தரவுகள் கூறுவது போல 28% அதிகரிக்கப் போவதில்லை, உண்மையில் வெறும் 17% தான் அதிகரிக்கப் போகிறது என்று மகேஷ் வியாஸ் தெளிவுபடுத்துகிறார்.

2020-21 நிதியாண்டுக்கு மத்திய அரசு ரூ 30.4 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இது ரூ 34.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு அடிப்படையில், சிறு சேமிப்பு நிதியத்திலிருந்து இந்திய உணவுக் கழகத்துக்கு கொடுக்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஒதுக்கீடே என்று அவர் விளக்கியுள்ளார்.

பொது கணக்குகளின் கணக்காளரின் அறிக்கையின்படி டிசம்பர் 2020 வரை இந்திய அரசு உணவு மானியத்திற்காக ரூ 1.25 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. உணவு மானியத்திற்காக, மொத்த ஆண்டுக்கு ரூ 4.22 லட்சம் கோடி செலவிடப் போவதாக நிதி அமைச்சர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுமார் ரூ 3 லட்சம் கோடி அதிகரிப்பானது இந்திய உணவுக் கழகம் தேசிய சிறு சேமிப்பு நிதியத்திலிருந்து வாங்கிய கடனை அடைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியே ஆகும்.

அதாவது, இது உண்மையில் 2020-21 ஆண்டுக்கான செலவு இல்லை, அரசின் கடந்த கால நிலுவைகளை தீர்ப்பதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ரூ 3 லட்சம் கோடியை, திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ 34.5 லட்சம் கோடியிலிருந்து கழித்தால், 2020-21-க்கான ஒப்பிடும்படியான மதிப்பீடு கிடைக்கிறது. இந்த ரூ 31.5 லட்சம் கோடி செலவினம் என்பது 2019-20-ல் அரசு செலவினங்களை விட 17.3% மட்டுமே அதிகம் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசின் செலவினத்தில் இந்த அளவு வளர்ச்சியைக் கூட சாதிக்க முடிந்தால் அதை நல்லதிர்ஷ்டமாகவே கருத வேண்டும், ஏனென்றால் டிசம்பர் 2020 வரை வெறும் 8% மட்டுமே செலவு அதிகரித்துள்ளது என்று மகேஷ் வியாஷ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு முழுவதற்கு 17.3% வளர்ச்சியை அடைய வேண்டுமானால், 2019-20-ன் கடைசி காலாண்டில் செலவிட்டதை விட 2020-21-ன் கடைசி காலாண்டில் 51% அதிகம் செலவழிக்க வேண்டும். இது மிகவும் கடினமானது.

நினைவு தெரிந்த காலத்தில் மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியின் போது அரசு செலவினம் 10-17% அதிகரிப்பு என்பது மிகவும் குறைவானது என்று கூறியுள்ள மகேஷ் வியாஸ், மத்திய அரசு தொடர்ந்து பழமைவாத நிதிக் கொள்கையை பின்பற்றுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரம், கடந்த கால ஊதாரித்தனத்தை ஏற்றுக் கொள்வதில் நேர்மையை காட்டி, நிதிப் பற்றாக்குறை பற்றிய யதார்த்தத்தை பிரதிபலிக்கும்படி, அதிகாரபூர்வ நிதிப் பற்றாக்குறை சதவீதத்தை முன்பு நினைத்துப் பார்க்க முடியாத மட்டத்துக்கு அதிகரிக்க அனுமதித்துள்ளது, மத்திய அரசு.

2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், தான் கூடுதல் செலவு செய்யாமலேயே, பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளதை அரசு கவனித்தது போல தெரிவதாகவும், வளர்ச்சியை செலவில்லாமல் பெற முடியுமானால் செலவை அதிகரிக்க காரணம் இல்லை என்று அது கருதுவதாக தெரிவதாகவும் மகேஷ் வியாஸ் கூறுகிறார்.

பங்குச் சந்தையின் வரலாறு காணாத வளர்ச்சி யாருக்கு நல்லது? – அருண் கார்த்திக்

செலவில்லாமல் வளர்ச்சியை அடைவது எப்படி என்பதுதான் சிக்கல்? பணக்காரர்களுக்கு வரிகளை உயர்த்தாமல், ஏழைகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்காமல் இருப்பதன் மூலம் அது செய்யப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்