Aran Sei

கிரிப்டோ நாணயங்கள் தடை செய்யப்படுமா? – பிட்காயின் விலை ரூ 44 லட்சத்தை எட்டிய நிலையில் விவாதம்

Image credit : zeebiz.com

கிரிப்டோ நாணயங்களுக்கான எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு விடாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில், அவற்றை தடை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நேற்று, ஒரு தொலைக்காட்சி சேனல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், “அதிகாரபூர்வ கிரிப்டோ நாணயம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கும், என்றாலும் அவற்றுக்கான எல்லா வாய்ப்புகளையும் நாங்கள் தடை செய்யப் போவதில்லை” என்று பேசியுள்ளார்.

“பிளாக்செயின், பிட்காய்ன், கிரிப்டோ நாணய பரிசோதனைகளை ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு சிறிதளவு வாய்ப்புகளை கொடுப்போம். இந்த பரிசோதனைகளை சார்ந்திருக்கும் நிதிதொழில்நுட்பத் துறைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படாது. இது தொடர்பான அமைச்சரவை குறிப்பு விரைவில் தயாராகும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம், கிரிப்டோ நாணயங்கள் மீது முழு தடை விதிக்கப்படும் என்ற ஊகங்களுக்கு அவர் முடிவு கட்டியுள்ளதாக டைம்ஸ் ஆ்ப் இந்தியா தெரிவிக்கிறது.

பிளாக்செயின் என்பது கணினி மூலமான இரகசிய குறியீடாக்கத்தை பயன்படுத்தி நிதி பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான தொழில்நுட்பம். இந்த பிளாக்செயின் அடிப்படையில் தனிநபர்களால் உருவாக்கப்பட்டு, நிதி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் நாணயங்கள் கிரிப்டோ நாணயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தின் இயல்பு காரணமாகவே நாணயங்களின் எண்ணிக்கை வரம்பிடப்படுவதால், அவற்றின் வழங்கல் பெருமளவு அதிகரிக்க முடியாது. எனவே, அவற்றை பலர் வாங்க முற்படும்போது விலை கணிசமாக அதிகரிக்கிறது.

கிரிப்டோ நாணயங்களில் ஒன்றான பிட்காயினின் விலை சுமார் ரூ 43 லட்சத்தை எட்டியுள்ளது. சென்ற ஆண்டு இதே நாளில் சுமார் ரூ 4 லட்சம் ஆக இருந்த அதன் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா முழு அடைப்பினால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை தீர்ப்பதற்கு அமெரிக்க அரசு எடுத்து வரும் நிதி ஊக்கக் கொள்கைகளால், முதலீட்டாளர்கள் கையில் அதிகரித்த பணப்புழக்கம் இந்த விலை உயர்வை தூண்டியுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 2015-ல் பிட் காயினின் விலை ரூ 20,000 அளவில் மட்டுமே இருந்தது. இவ்வாறு, கிரிப்டோ நாணயங்கள் எதிர்காலத்தில் பெருமளவில் நாணயமாக பயன்படும் என்ற ஊகத்தின் அடிப்படையிலான ஊக வணிகத்தின் காரணமாக, அதன் விலை 6 ஆண்டுகளுக்குள் 200 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ரிசர்வ் வங்கி கிரிப்டோ நாணயங்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், கிரிப்டோ நாணயங்களுக்கு நாணயம் என்று பெயர் கொடுப்பதன் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

“நாணயம் என்பது ஒரு அரசின் இறையாண்மைக்கு உட்பட்ட உரிமை, அதை எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்திடமும் ஒப்படைக முடியாது. இந்த நிதிக் கருவிகள் சட்டபூர்வமானவையா என்ற கேள்விக்கும் ஒரு முடிவு காண வேண்டும்” என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கிரிப்டோ நாணயங்கள் மூலமாக சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் அதிகரித்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் கறுப்புப் பண புழக்கமும் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. கிரிப்டோ நாணயங்கள் நாட்டின் நிதித்துறையை கடும் அபாயங்களுக்கு உட்படுத்தக் கூடும் என்றும் அது கவலை தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்