Aran Sei

‘விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட்டில் வெட்டிச் சுருக்கப்படும் அவர்களுக்கான நிதி’ – கே.பாலகிருஷ்ணன்

2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளன என்றும் கடந்த ஆண்டில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த உர மானியம், இந்த ஆண்டு ரூ. 29,000 கோடியாக பெருமளவு வெட்டிச் சுருக்கப்பட்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து, கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கான வருவாயைப் பெருக்குவதற்கு எந்தவொரு உருப்படியான ஆலோசனைகளையும் முன்வைக்காத இந்த நிதிநிலை அறிக்கை, வரும் நிதியாண்டில் மட்டும் ரூ 12 லட்சம் கோடி அளவிற்கு அரசாங்கம் கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பதையும் முன் மொழிந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2021: இந்தியாவின் சொத்துக்கள் முதலாளிகளிடம் விற்கப்பட இருக்கிறது – ராகுல் காந்தி

கொரோனா தொற்றுக் காலத்திலும் தங்களுடைய செல்வங்களைப் பெருமளவு பெருக்கிக் கொண்டிருக்கும், மிகப் பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரி உள்ளிட்ட இதர வரிகளை விதித்து, அரசு வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்று இடதுசாரிகள் தரப்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய பிறகும் மோடி அரசு அந்தத் திசைக்கே போகவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதாரத்துறையில் முதலீட்டை அதிகரிப்பதாகச் சொன்னாலும் கூட கொரோனா தொற்று நோய்த்தடுப்பிற்காக வெறும் ரூ 35,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட நமது நாட்டில் கொரோனா நோயை எதிர்கொள்வதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும் இது எந்த வகையிலும் போதுமானதல்ல என்று அவர் கூறியுள்ளார்.

’எல்ஐசி உள்ளிட்ட அரசு நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்க இலக்கு’ – நிர்மலா சீதாராமன்

“ஒரே நாடு, ஒரே ரேஷன் என ஆடம்பரமாக அறிவிக்கப்பட்டு 69 கோடி மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வோம் என கூறப்பட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்றும் வகையிலான நிதி ஒதுக்கீடு என்பது நிதிநிலை அறிக்கையில் இல்லை.

ஏற்கனவே ஊரக வேலை உறுதித்திட்ட நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், சென்ற ஆண்டு திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டை விட, அத்திட்டத்துக்கு ரூ. 38,500 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சராசரியாக 45 நாட்களே வேலை கிடைக்கும் சூழலில் இந்தக் குறைவான ஒதுக்கீடு மேலும் வேலை நாள் குறைப்பிற்கே இட்டுச் செல்லும்.” என்று கே.பாலகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.

அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் போராடிவரும் இந்தச் சூழ்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளன என்று கூறும் அவர், உர மானியம் கடந்த ஆண்டிலிருந்த ரூ.1 லட்சம் கோடியிலிருந்து, ரூ. 29,000 கோடியாக பெருமளவு வெட்டிச் சுருக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

’மேலும் இரு கொரோனா தடுப்பூசி; தற்சார்பு சுகாதாரத்திற்கு ரூ.64 ஆயிரத்து 180 கோடி நிதி’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மேலும், “விவசாயக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடும் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்கான ஆக்கபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. அதேபோல மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என போராட்டங்கள் நடைபெறும் நிலையில் தனியாரை மின்சாரத் துறையில் ஊக்குவிப்பதற்கான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதோடு, மின்சாரத்துறை சீர்திருத்தங்களுக்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இது மின்சாரத் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடாகும்.” என்று கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய பட்ஜட்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டம் – விவசாயிகள் போராட்டம்தான் காரணமா?

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரித்து லாபத்தில் இயங்கும் ஆயுள் காப்பீடு நிறுவனம் உள்ளிட்ட முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும் என்ற ஆபத்தான முன்மொழிவை பட்ஜெட் கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டும் அவர், இது மிகவும் மோசமான அறிவிப்பாகும் என்பதோடு பொதுத் துறை நிறுவனங்களை அடியோடு நாசமாக்கும் செயலாகும் என்று எச்சரித்துள்ளார்.

“கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ 1.75 லட்சம் கோடிக்கு பொதுத்துறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்ற இலக்கு இருந்தது. இப்போது அது ரூ 2.1 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சுயசார்பு பொருளாதாரம் என்று மோடி அரசு தம்பட்டம் அடிப்பதற்கு நேர்மாறாகவே பட்ஜெட் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும், இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கை வகிக்கும் சிறு-குறு தொழில்களுக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கப்படும் எனும் அறிவிப்பு போதுமானதல்ல என்பதோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிக தாராளமாக சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.” என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன?

மேலும், “உள்நாட்டில் தயாரிப்போம் எனும் முழக்கத்தை முன்வைக்கும் அரசு உள்நாட்டு சிறு-குறு தொழில்களை அழிக்கவே விரும்புகிறது என்பதை இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. சென்னையில் 119 கி.மீ. தூரத்திற்கான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்காக ரூ.63,246 கோடி ஒதுக்கப்படும் எனும் அறிவிப்பும், தமிழகத்தில் சாலை விரிவாக்கத்திற்காக 1.03 லட்சம் கோடி சாலைத் திட்டங்கள் உருவாக்கப்படும் எனும் அறிவிப்பும் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்த அறிவிப்பாகவே உள்ளது.” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“ஏனெனில் மதுரையில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உருப்படியான அறிவிப்போ அல்லது பணிகளோ இதுவரை தொடங்கப்படாத நிலையில் இத்தகைய அறிவிப்புகளும் அப்படித்தானோ என எண்ணத் தோன்றுகிறது. ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்காமல் புதிய சாலை திட்டங்களை அறிவிப்பதால் யாருக்கும் பலன் இருக்கப் போவதில்லை.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

அழிவுப்பாதைக்குச் செல்லும் இந்திய பொருளாதாரம் – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

சமையல் எரிவாயு விலையை வரைமுறையற்று ஏற்றிவிட்டு, மானியமும் முறையாக வந்து சேராத நிலையில் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு என்ற அறிவிப்பு கேலிக்கூத்தாகவே உள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையைத் தொகுத்துப் பார்க்கும்போது, மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காமலும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அளிக்காமலும், இன்றைக்கு நாட்டில் முன்னுக்கு வந்திருக்கும் விலை உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட நெருக்கடிகளுக்குத் தீர்வளிக்காமலும் பெரும் ஏமாற்றமளிக்கும் வெற்று அறிக்கையாகவே இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என்று சுட்டிக்காட்டுவதோடு, உணவு, வேலை பாதுகாப்பை முன்னிறுத்தி, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்திட வேண்டுமென பொதுமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்