Aran Sei

’ஒருபக்கம் சுயசார்பு இந்தியா; மறுபக்கம் அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம்’ – பட்ஜெட் குறித்து முத்தரசன்

சுயசார்பு இந்தியா முழக்கத்தின் கீழ் அந்நிய முதலீட்டுக்கு நாட்டை விற்பனை செய்யும் வகையில் நிதி நிலை அறிக்கை இருக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு தழுவிய பொது முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் பொருளாதாரத் தேக்கம் போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜட்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டம் – விவசாயிகள் போராட்டம்தான் காரணமா?

“சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் என நாட்டின் உற்பத்தித் தொழில்கள் மரணப் படுக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவை மறுவாழ்வுக்காக உயிர் தண்ணீர் கேட்டு கதறிக் கண்ணீர் வடித்து வருகின்றன.
வரலாறு காணாத அளவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், நாடு தழுவிய முடக்கம் கோடிக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகளை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது.” என்று முத்தரசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பரிதவித்து வருகின்றனர். வேளாண்மைத் துறையில் நீடித்து வந்த நெருக்கடி வெடித்து தொடர் போராட்டங்களாக வெடித்துள்ளது. இதுபோன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மத்திய நிதி நிலையறிக்கை பார்க்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்டது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன?

மேலும், “விவசாயத்துறை முன்னேற்றத்திற்காக டீசல் லிட்டருக்கு தலா ரூ 4-ம், பெட்ரோல் லிட்டருக்கு தலா ரூ.2.50-ம் கூடுதல் வரி வசூலிப்பதாக அறிவித்தள்ளது. விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தைக் காட்டி, எரிபொருள் நுகர்வோர் மீது சுமை ஏற்றுவது வர்த்தக சூதாட்ட அரசியல் சதி என்பதை எளிதில் உணரமுடியும். வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியுள்ளது. ஜனநாயக உரிமைகளை மறுத்து, நியாயத்தின் குரலை அடக்குவதற்கு உள்துறை நிர்வாகத்திற்கு நேசக் கரம் நீட்டியுள்ளது.” என்று முத்தரசன் விமர்சித்துள்ளார்.

“சுயசார்பு இந்தியா” என்ற பெருமுழக்கம் செய்து, அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் வஞ்சக எண்ணம் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கை, நாட்டை அந்நிய முதலீட்டிற்கு அடகுவைத்து அடிமைப்படுத்தும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு நாட்டு மக்களை எச்சரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்